ஈட்டி போலப் பாயும் கேள்விக்கணைகளுக்குச் சொந்தக்காரர். தேசிய அரசியலில் அதிர்வலைகளை உருவாக்குபவர். இவர் எழுப்பும் கேள்விகள், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியினரை தூக்கம் தொலைக்க வைக்கின்றன.
முழுதாக 30 வயது கூட நிறைவடையவில்லை. ஆட்சியாளர்களை கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். யார் இவர் என்று கேட்டால், கிடைக்கும் பதில் வியப்பைத்தான் தரும்...
இந்த துருவ் ராட்டி, ஒரு யூடியூபர்...
அரசியலையும் சமூக பிரச்னைகளையும் முன்வைத்து கேள்விகளை பட்டியலிட்டு, இவர் வெளியிடும் வீடியோக்கள், சம்பந்தப்பட்டவர்களை படபடப்பாக்கி விடும். ஏனென்றால், கேள்விகளுக்கு முன்பாக, புள்ளிவிவரங்களையும் ஆதாரங்களையும் முன்வைத்துவிடுகிறார் துருவ்.
ஹரியானா மாநிலம் ரோடக் தான் சொந்த ஊர். படிக்கும்போது, ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டுள்ளார். மேல்படிப்புக்காக பறந்தது ஜெர்மனிக்கு.. படித்தது, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த பட்டப்படிப்புகளை. அங்கு பழக்கமான ஜூலி என்பவரை, காதலித்து மணம் முடித்து, இன்றும் அங்கேதான் வசிக்கிறார்.
இதற்கிடையில்தான், 2013-ல் பயணங்கள் குறித்த வீடியோக்களை படமாக்கி, தனது பெயரில் தொடங்கிய யூ டியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். ஆனால், தனது பாதை இதுவல்ல என்று முடிவு செய்த துருவ் ராட்டி, ரூட்டை மாற்றி விட்டார்.
எக்ஸ்பிளைனர் வீடியோ பாணியில், முதல்முறையாக, 2016 ஆம் ஆண்டில், அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை முன்வைத்து, ஒரு வீடியோவை வெளியிட்டார். அதன் பெயர் "HOW LIES AND PROPAGANDA ARE SPREAD". இந்த வீடியோ, மத்தியில் ஆளும் பாஜக அரசை, பெயர் குறிப்பிடாமல் கேள்வி கேட்டது.
"BJP IT CELL EXPOSED" என்ற வீடியோதான், துருவை பரபரப்பான பிரபலமாக்கியது. பாஜக ஆட்சியை காரசாரமாக விமர்சித்த அந்த வீடியோ, துருவின் யூடியூப் சேனலுக்கு லட்சக்கணக்கில் சப்ஸ்க்ரைபர்களை ஈட்டிக் கொடுத்தது. இன்று வரை 600 க்கும் அதிகமான வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.
இவற்றில் சில தவிர, மற்ற வீடியோக்கள், பாஜக ஆட்சியையும் பிரதமர் மோடியையும் நோக்கி கேள்விகளை எழுப்புகின்றன. ஒவ்வொன்றும் கோடிக்கணக்கில் 'Views'களைக் கொண்டிருக்கின்றன. "The Reality Of Yogi Aadhithyanath" என்ற வீடியோ போன்றவற்றின் மூலம், பாஜக ஆளும் மாநிலங்களையும் விமர்சிக்கிறார் துருவ்.
புல்வாமா தாக்குதல், மணிப்பூர் கலவரம், குஜராத்தின் மோர்பி பாலம் விபத்துக்குள்ளானது, குத்துச்சண்டை வீராங்கனைகள் விவகாரம், தேர்தல் பத்திரங்கள், EVM இயந்திரங்கள் ஹேக்கிங், வெப்ப அலை, இந்திய அரசியல், வடகொரியா அரசியல் நிலை, மதம் குறித்த பார்வை, என, சர்ச்சைக்குரிய எதையுமே விட்டுவைக்கவில்லை துருவ்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்த வீடியோவில், சர்வாதிகாரி பயந்துவிட்டார் என்று குறிப்பிட்டது, பரபரப்புக்கான திரியைக் கொளுத்திவிட்டதாக பார்க்கப்பட்டது. பாகிஸ்தானில் இம்ரான்கானின் தோல்வி குறித்த இவரது வீடியோவை, இந்தியாவில் தடை செய்தது மத்திய அரசு.
துருவ் ராட்டியின் துணிச்சலான வீடியோக்களால், அவரது மனைவி ஜூலிக்கு மிரட்டல் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. RATHEE VLOGS என்ற மற்றொரு யூ டியூப் சேனலில், தனது சர்வதேச பயண வீடியோக்களை பதிவேற்றுகிறார் துருவ் ராட்டி. கடந்த ஆண்டு, டைம்ஸ் இதழ் வெளியிட்ட, அடுத்த தலைமுறைக்கான தலைவர்கள் பட்டியலில் துருவ் ராட்டியும் இடம்பெற்றுள்ளார்.