போராட்டத்தில் ரயில்களை கொளுத்தும் அதிகாரத்தை யார் கொடுத்தது?: கங்கனா ரனாவத்..!
போராட்டத்தின்போது பேருந்துளையும், ரயில்களையும் தீயெட்டு கொளுத்தும் அதிகாரத்தை யார் கொடுத்தார்கள் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. சில இடங்களில் ரயில்களும், பேருந்துகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 16 பேர் பலியாகியதாக கூறப்பட்டது. தமிழகத்திலும் கல்லுரிகளில் மாணவர்களின் போராட்டம் தீவிரமானது.
இது குறித்து தேசிய விருது பெற்றவரும் பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத்திடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர் " போராடுபவர்கள் முதலில் மனதில் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். அது, ஒருபோதும் போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது என்பதுதான். நம் நாட்டில் 3 முதல் 10 சதவிகித்தினர் மட்டும் வரி கட்டுகின்றனர், மீதமுள்ளவர்கள் அவர்களை நம்பி இருக்கின்றனர். இப்படி நிலைமை இருக்கையில் பேருந்து, ரயில் மற்றும் இதர போக்குவரத்துகளை எரித்து நாட்டில் பிரச்னையை உருவாக்கும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தார்கள் ?" என கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.