அமெரிக்கவாழ் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றால் அது இருநாட்டு நல்லுறவுக்கான சிறந்த சைகையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐநா பொதுசபையின் 74ஆவது கூட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. ஐநா பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வரும் 22ஆம் தேதி ஹூஸ்டன் நகரில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் நடத்தும் ''Howdy, Modi''என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, இந்தச் சந்திப்பு நிகழ்ந்தால் அது இருநாட்டு நல்லுறவுக்கு சிறந்த ஒரு சைகையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
''Howdy, Modi'' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்கவாழ் இந்தியர்கள், அவை பிரதிநிதிகள், நீதிபதிகள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.