பீகார்: கருப்பு பூஞ்சையை தொடர்ந்து ஆபத்தான வெள்ளை பூஞ்சைகளின் பாதிப்பு

பீகார்: கருப்பு பூஞ்சையை தொடர்ந்து ஆபத்தான வெள்ளை பூஞ்சைகளின் பாதிப்பு
பீகார்: கருப்பு பூஞ்சையை தொடர்ந்து ஆபத்தான வெள்ளை பூஞ்சைகளின் பாதிப்பு
Published on

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலுடன் சேர்ந்து கருப்பு பூஞ்சைகளும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அவற்றைவிட ஆபத்தான வெள்ளை பூஞ்சைகளின் தாக்குதல் பீகாரில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சைகள் தாக்குவது அண்மையில் தெரியவந்தது. தமிழகத்திலும் கருப்பு பூஞ்சைகளின் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கருப்பு பூஞ்சைகளைவிட மிகவும் ஆபத்தான வெள்ளை பூஞ்சைகள் பீகார் தலைநகர் பாட்னாவில் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் 4 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதாக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் எஸ்.என். சிங் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற வெள்ளை பூஞ்சை பாதிப்புகள் இன்னும் பலருக்கு இருக்கக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளை பூஞ்சைகள் நுரையீரலை மட்டுமின்றி, மூளை, சிறுநீரகம், வயிறு, தோல், வாய் உள்ளிட்ட உறுப்புகளையும் தாக்கும் எனக் கூறியுள்ளார். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நீரிழிவு மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை வெள்ளை பூஞ்சைகள் தாக்கும் என எஸ்.என். சிங் கூறினார். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரைப் பயன்படுத்தும்போது அலட்சியம் காட்டினால்கூட வெள்ளை பூஞ்சை ஆபத்து நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் சி.டி-ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே மூலம் நோய்த்தொற்றைக் கண்டறிய முடியும் என்றும் டாக்டர் சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com