பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி, மாணவராக இருந்த காலத்தில் சில நாட்கள் திகார் சிறையில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அபிஜித் பானர்ஜி பொருளாதாரம் பயின்றபோது அவருக்கு சீனியர் மாணவர்களில் ஒருவராக இருந்த எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் மூத்த ஆசிரியர் டி.கே. அருண், அபிஜித் குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். அதில், அபிஜித் எந்த அரசியல் அமைப்பையும் சார்ந்திருக்கவில்லை என அருண் குறிப்பிட்டுள்ளார்.
1983-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் நீண்ட மாணவர் போராட்டம் நடைபெற்றதையும், அதன் உச்சகட்டமாக துணை வேந்தர் இல்லத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் அழைக்கப்பட்டதாகவும் அவர்கள் மாணவர்களை கைது செய்ததாகவும், அப்போது அபிஜித் பானர்ஜியும் கைது செய்யப்பட்டதாகவும் அருண் குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் ஒரு சில நாட்களிலேயே விடுவிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிரான வழக்குகள் கைவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே திகார் சிறையிலிருந்து விட்டு வந்து நோபல் பரிசு பெறும் முதல் நபர் அபிஜித் பானர்ஜிதான் என அருண் குறிப்பிட்டுள்ளார்.