போதைப்பொருள் விவகாரத்தில் கைதான ஆர்யன் கான் உள்ளிட்டோரை அதிகாரிகள் அழைத்து செல்லும் போது அவருடன் பாரதிய ஜனதா பிரமுகர்கள் சிலர் இருந்தது குறித்து தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பையிலிருந்து கோவா செல்லும் கப்பலில் போதை விருந்து நடத்திய புகாரில் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை போதைப் பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரை விசாரணைக்காக அழைத்து செல்லும் போது உடன் கே.பி.கோசாவி என்ற நபரும் செல்வதாக தேசியவாத காங்கிரஸின் செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்யன் கானுடன் செல்லும் கே.பி.கோசாவி தன்னை பாஜக துணைத் தலைவர் என குறிப்பிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி உள்ளி்ட்டோருடன் அவர் படம் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் நவாப் மாலிக் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஆர்யன் கானை விசாரணைக்கு அழைத்துச்சென்றபோது உடனிருந்தவர்களில் ஒருவரான மனிஷ் பன்சாலி என்பவர் தான் பாஜகவின் விசுவாச தொண்டர் என்றும் போதை மருந்து கட்டுப்பாட்டு துறையில் ஒரு பகுதியாக இருந்து அவர்களுக்கு தகவல்களை வழங்கி வந்ததாகவும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் நவாப் மாலிக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனக் கூறி போதை மருந்து கட்டுப்பாட்டுத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே போதைப்பொருள் வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை கைது செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆர்யன் கானை 3 நாட்கள் காவலில் எடுத்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் நடத்திவரும் விசாரணை இன்று நிறைவடைகிறது.