வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்றில், ‘ஒரு பெண்ணை, மற்றொரு பெண்ணே பாதுகாப்பது இல்லை’ என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
திருமணப் பந்தத்தில், வரதட்சணைக்கு எதிராக இந்தியாவில் எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும், ஆங்காங்கே வரதட்சணை தொடர்பான கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசம் எதுவுமில்லை. திருமணத்தின் பேரில் நடந்துவரும் இந்தக் கொடூர சம்பவங்களின் சாட்சியாக, சில பெண்கள் வரசட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொள்வதும் உண்டு.
அந்தவகையில், மருமகளை வரதட்சணை கொடுமை செய்ததால், அப்பெண் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, 64 வயது பெண்மணியான மாமியார் மீது வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின்போது, குற்றம் உறுதி செய்யப்பட்டதால், அந்தப் பெண்மணி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், மருமகளை வரதட்சணை கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 64 வயது பெண்ணின் மேல்முறையீட் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாவது, “ஒரு மாமியார், தன் மருமகளுக்கு கொடுமை செய்தால், அது மிகவும் கடுமையான குற்றமாகும். ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் பாதுகாக்காதபோது, பின்னாளில் அந்தப் பெண்ணுக்கு அது மிகவும் பாதிப்பு ஏற்படுத்த கூடியதாக மாறுகிறது” என்று உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும், வரதட்சணை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாமியாருக்கு, மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் அளித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.