வதந்திகள் எங்கிருந்து பரப்பப்படுகின்றன என்பது குறித்த தொழில் நுட்ப வசதியை ஏற்படுத்த வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய கிராமப்புறங்களில் கடந்த ஓராண்டில் வாட்ஸ் அப் மூலம் வதந்திகள் பரவுவது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை கடத்த வந்ததாக கூறி அப்பாவிகளை தாக்குவது, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகியவை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. வாட்ஸ் அப் மூலமே பெரும்பாலும் வதந்திகள் பரப்பப்படுவதாக புகார் எழுந்தது. இதன் உண்மைத் தன்மையை அறிவதற்காக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்பாடு கடந்த 2 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, வதந்திகளை பரப்ப அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. வதந்தி பரவுவதை தடுத்து நிறுத்தாமல் இருந்தால் அதற்கு துணை போனதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது.
இந்நிலையில், வதந்தியான தகவல்களை ஆராய்ந்து அதன் தொடக்கத்தை கண்டறிய உள்நாட்டு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி குறைதீர்ப்பு அதிகாரியை வாட்சப் நியமிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ்-ஐ டெல்லியில் இன்று சந்தித்த பின் அமைச்சர் இதனை தெரிவித்தார். வாட்ஸ் அப்பினால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் குற்றங்களுக்கும் அது அடித்தளம் அமைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் இதற்கு தீர்வு காண்பதன் அவசியத்தை வாட்ஸ் அப் நிறுவனம் உணர்ந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.