கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் 37.16 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 'தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021' அமலுக்கு வந்தபின்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறி செயல்படும் பயனர்களின் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையை மேகொண்டு மேற்கொண்டு வருகிறது வாட்ஸ்அப். அதுதொடர்பான மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் 37.16 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதில் புகார்களைப் பெறுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையில் 9 லட்சத்து 90 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதம் முடக்கப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை விட 60 சதவீதம் அதிகம் ஆகும். முன்னதாக கடந்த அக்டோபரில் மொத்தம் 23.24 லட்சம் இந்திய கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியதும், அதில் முன்னெச்சரிக்கை அடிப்படையில் 8.11 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வாட்ஸ்அப் தொடர்ந்து பயனர்களுக்கு சிறந்த சேவை வழங்க முயற்சி செய்து வருகிறது. பயனர்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெறுப்பு பேச்சு, போலி செய்தி பகிர்தல் ஆகியவற்றைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள், பயனர்கள் புகார்கள், போலி கணக்கு, தவறான செய்தி பகிர்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
தவற விடாதீர்: போன் நம்பர் இல்லாமலேயே ஈசியா பணம் அனுப்ப முடியும்.. எப்படி தெரியுமா?