மணிப்பூரில், மெய்டீஸ் இனத்தைச் சேர்ந்த கலவரக்காரர்கள் சிலர் குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோ கடந்த ஜூலை 19 ஆம் தேதி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் (இம்பாலிலிருந்து 35 கி.மீ.) நடைபெற்றதாகவும், அப்போது அந்த இடத்தில் இருந்த போலீசார் அவர்களைக் காப்பாற்றவில்லை எனவும், மணிப்பூரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருப்பதால் இச்சம்பவம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தாமதமாக வெளியுலகுக்கு தெரியவந்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
மேலும், நான்கு போலீசார் காரில் அமர்ந்தபடி தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வேடிக்கை பார்த்ததாகப் பாதிக்கப்பட்ட பெண்ணே கூறியிருப்பதுதான் கூடுதல் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் தங்களது கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர். மணிப்பூரின் இந்தப் பிரச்னையால் நாடாளுமன்ற இரு அவைகளும் இரண்டு நாட்களாக முடக்கப்பட்டன.
இதற்கிடையே குக்கி இனப் பெண்கள், மெய்தி கலவரக்காரர்களிடம் சிக்கியது எப்படி, இதில் நடந்தது என்ன போன்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த சம்பவத்துக்கு முக்கியக் காரணமே போலியாக வெளியான வீடியோ ஒன்றுதான் எனக் கூறப்படுகிறது. அதில் ‘நம்முடைய சமூகத்தைச் சார்ந்த பெண் ஒருவர் குக்கி இனத்தவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனப் பதிவிட்டு யாரோ ஒரு பெண்ணின் படத்தைப் பதிந்து, மெய்தி இன மக்களிடம் வீடியோ ஒன்று பரவியுள்ளது.
இந்த வீடியோ மணிப்பூரில் வன்முறை வெடித்த மே மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த செய்தி மெய்தி சமூகத்தினரிடம் காட்டுத் தீயாய்ப் பரவியுள்ளது. இதனால் பழிதீர்க்கும் நோக்கில் கும்பல் ஒன்று, கிராமத்திற்குள் புகுந்து மற்றொரு குழுவை விரட்டி உள்ளது. அந்த குழுவில் 2 ஆண்கள், 3 பெண்கள் உள்பட 5 பேர் உள்ளனர். அவர்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் ஆகியோருடன் வேறு இரு பெண்மணிகளும் இருந்துள்ளனர்.
இவர்கள், தாக்குதல் நடத்த வந்த எதிர்கும்பலிடம் இருந்து தப்புவதற்காக வனப் பகுதிக்குள் ஓடியுள்ளனர். ஆனாலும் அவர்களை விடாமல் துரத்தியுள்ளது அந்தக் கும்பல். இதனால், தன் சகோதரியை அந்தக் கும்பலிடம் காப்பாற்ற அவருடைய சகோதரர் முயன்றுள்ளார். ஆனால் அந்த கும்பல், சம்பவ இடத்திலேயே அந்த இளைஞரைக் கொலை செய்துள்ளது.
இதற்குப் பின்னரே, அந்த கும்பலால் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கும் துஷ்பிரயேகத்துக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.