“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது?”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்

“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது?”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்
“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது?”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்
Published on

பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் இப்படி செய்தால், நாட்டின் நலன் என்ன ஆவது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், இத்துறையில் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாகவும் கூறி பிரசாந்த் பூஷண், எம்.எல்.சர்மா உள்ளிட்டோர் தரப்பில் தொடரப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் அனல் பறக்கும் வாதங்கள் நடைபெற்றன. காலை 10.30 மணி முதல் சுமார் 4 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றது. காலையில், மனுதாரர்கள் மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆகியோரின் வாதங்களை நீதிபதிகள் கேட்டனர்.

வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இதுதொழில்நுட்பம் தொடர்பான விவகாரம் என்பதால் விமானப்படை அதிகாரிகள் உடனடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். விமானப்படை அதிகாரி அழைக்கப்பட்டதற்கு, மத்திய அரசின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விமான ஒப்பந்தம் என்பது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் இந்த விவகாரத்தை இவ்வளவு தூரம் விவாதிப்பதே தேவையற்றது என்றும் அவர் வாதிட்டார். 

இதனையடுத்து, விமானப்படை மூத்த அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது ரஃபேல் விமானம் குறித்த விவரங்களை விமானப்படை துணைத் தளபதி மார்ஷல் சௌத்ரியிடம் நீதிபதிகள் கேள்வி கேட்டனர். 

நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட உரையாடல்:-

தலைமை நீதிபதி : போர் விமானங்கள் 3ம் தலைமுறையா? அல்லது 4ம் தலைமுறையா?

மார்ஷல் : இந்தத் தொழில்நுட்பத்தை நாங்கள் 3.5 தலைமுறை என்றுதான் நாங்கள் அழைப்போம்

தலைமை நீதிபதி : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சமீபத்திய போர் விமானம் எது? 

மார்ஷல் : சுகோய் 30 

நீதிபதி : 1985 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய தொழில்நுட்ப போர் விமானங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லையா?

மார்ஷல் : இல்லை

நீதிபதி : தற்போது வாங்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள் எந்தத் தொழில்நுட்பம்

மார்ஷல்: 5 ஆம் தலைமுறை

விசாரணை முடிந்த பின்னர், “ஏர் மார்ஷல், துணை ஏர் மார்ஷல் இருவரும் திரும்பி செல்லலாம். இங்கு வித்தியாசமான போர் விளையாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீங்கள் உங்களுடைய போர் அறைகளுக்கு செல்லுங்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் தொடர்ந்த உரையாடல்....

நீதிபதி : ரஃபேல் விமானங்கள் எந்தெந்த நாடுகள் பயன்படுத்தப்படுகிறது?

தலைமை வழக்கறிஞர் : பிரான்ஸ், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் 2014 முதல் பயன்பாட்டில் உள்ளன.

ரிலையன்ஸ் தேர்வு தொடர்பான வாதங்கள்..

தலைமை வழக்கறிஞர் - ரஃபேல் ஒப்பந்தத்தில் டசால்ட் நிறுவனத்தின் இந்திய பங்குதாரர் யார் என்பது இதுவரை தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

நீதிபதி ஜே.ஜோசப் : “டசால்ட் நிறுவனம் தேர்வு செய்யும் பங்குதாரர் சரியில்லை என்றால், நாட்டின் நலன் என்ன ஆவது? பங்குதாரரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான தேவை என்ன இருந்தது?”  

தலைமை வழக்கறிஞர்: “ஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனங்கள் தங்களது வெளிநாட்டு பங்குதாரரை தேர்வு செய்வது தொடர்பான நடைமுறையில் 2015 ஆம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி தனது வெளிநாட்டு பங்குதாரர்களை நிறுவனம்தான் தேர்வு செய்ய முடியும். ஒப்பந்தங்களின் சுமையை குறைக்க இந்தத் தளர்வுகள் செய்யப்பட்டன. 2019 ஆம் ஆண்டு அக்டோபரில்தான் இந்திய பங்குதாரர் யார் என்பதை டசால்ட் நிறுவனம் எங்களிடம் தெரிவிக்கும்”  

பிரசாந்த் பூஷன்:  “இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் எமர்ஜென்ஸி நேரத்தில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒப்பந்தங்களுக்கான நடைமுறைகளை இப்படி திருத்தி பயன்படுத்த முடியாது.” 

தலைமை வழக்கறிஞர்: “கார்கில் போரின் போது நம்முடைய வீரர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்போது ரஃபேல் விமானங்கள் இருந்திருந்தால், பாதிப்புகள் பெருமளவு குறைந்திருக்கும்.”

நீதிபதி : கார்கில் போர் நடைபெற்றது 1999-2000 ஆண்டுகளில். ரஃபேல் பயன்பாட்டிற்கு வந்தது 2014 ஆம் ஆண்டில் தான். 

தலைமை வழக்கறிஞர் : இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற அனுமானத்தில் தான் சொன்னேன்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கில் விசாரணை முடிவடைந்ததால், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com