பிரதமர் மோடியின் அமெரிக்க ஆலோசனைகள் : உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் கூடுமா?

பிரதமர் மோடியின் அமெரிக்க ஆலோசனைகள் : உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் கூடுமா?
பிரதமர் மோடியின் அமெரிக்க ஆலோசனைகள் : உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் கூடுமா?
Published on

அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்காக உலகத் தலைவர்கள் குழுமியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பல உலகத் தலைவர்களின் பிரதமர் நரேந்திர மோடியுடன் பணி சந்திப்புகள் நிகழ்த்தி வருகிறார்கள். பிரதமர் மோடியின் இந்த தொடர் சந்திப்புகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் இந்தியாவுக்கு உலக அரங்கில் என்னென்ன நன்மைகள், பலன்கள் கிடைக்குமென்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.

அமெரிக்கா - ஜப்பான் - ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான இணக்கத்தின்மூலம் நடக்கும் "க்வாட்" அமைப்பில் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்தவம் மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. மேலும் இதன் மூலம் சீனா - பாகிஸ்தான் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவு மேலும் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா தோழமையுடன் இருந்து வந்தாலும், கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவுடன்தான் இந்தியாவின் கூட்டுறவு வலுவடைந்து வருகிறது.

சீனாவின் ஆதிக்க அச்சுறுத்தலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக "க்வாட்" கருதப்படுகிறது. சீனாவின் அச்சுறுத்தலுக்கு குறியாக உள்ள தாய்வான், தென் கொரியா வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகளுக்கு வரவேற்பு அளிக்கின்றனர். இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இத்தகைய அச்சுறுத்தலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் "க்வாட்" கூட்டமைப்பு மூலம் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனும் பாதுகாப்பு ரீதியான உறவுகளை இந்தியா வலுப்படுத்தி உள்ளது. இவையொரு பக்கமிருக்க ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்களை பிரதமர் மோடி "க்வாட்" குழுமத்தில் சந்தித்ததும், ஜோ பைடனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதும் இந்தியாவுக்கு உலக அரங்கில் கூடுதல் முக்கியத்துவத்தை காட்டும் வகையாக அமைந்துள்ளது.

உலக வல்லரசு நாடாக உருவாகும் நோக்கத்துடன் சீனா தொடர்ந்து வடகொரியா, பாகிஸ்தான், பர்மா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. இதைத் தவிர தென் அமரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை வியாபாரம் மூலம் அதிகரிக்க முயற்சிகள் செய்து வருகிறது.

இந்நிலையில், சீனாவுடன் பல்லாண்டுகளாக எல்லை பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் இந்தியா, வலுத்து வரும் சீன ஆதிக்கத்தை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் கருதுகின்றன. அந்த எண்ணத்தில் வருங்காலங்களில் பல ஐரோப்பிய நாடுகளும் சீனாவுக்கு எதிரான அணிக்காக இந்தியாவுடன் வலுசேர்க்கும் என கருதப்படுகிறது. சமீபத்தில் பிரிட்டன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பத்தை அமெரிக்காவுடன் இணைந்து "க்வாட்" உறுப்பினரான ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொள்ள முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பிரதமர் மோடி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் அமெரிக்காவில் நடத்த உள்ள ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்க்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனா, பாகிஸ்தானை தன் ஆதிக்கத்தில் வைத்திருப்பதும்; பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ன நாட்டை தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வோர்க் போன்ற தீவிரவாத அமைப்புகள் மூலம் தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்வதும் அமெரிக்கா அறிந்ததே.

பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாத குழுக்கள் செயல்பட அனுமதிக்க கூடாது என கமலா ஹாரிஸ் கடுமையாக கண்டனம் செய்துள்ளார். லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தான் மண்ணில் வளர்ந்து வருகின்றன என்கிற இந்தியாவும் குற்றச்சாட்டு விடுத்துள்ளது. இக்குற்றச்சாட்டின்மூலம், அமெரிக்காவின் ஆமோதிப்பு இந்தியாவுக்கு கிட்டியுள்ளது. பாகிஸ்தான், தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் போல செயல்படுகிறது என்பதும் அங்கிருந்து தீவிரவாத தாக்குதல்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை குறிவைத்து சதித் திட்டம் தீட்டப் படுகின்றன என்பது இந்தியாவின் தொடர் குற்றச்சாட்டாகும். தலிபான் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் ஆப்கன் நாட்டில், தீவிரவாத அமைப்புகள் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறையை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இந்தியாவுக்கு பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்கு பிறகு கூடுதல் பங்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- கணபதி சுப்பிரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com