திகார் சிறையில் மகாத்மா காந்தியின் சுயசரிதையான, சத்திய சோதனை புத்தகத்தை வாசிக்க, கடும் போட்டி நிலவுகிறது.
டெல்லியில் உள்ள திகார் சிறையில் மொத்தம் 14 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இங்கு பிரமாண்ட நூலகம் ஒன்றும் உள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழங்கிய சுமார் 1 லட்சம் புத்தகங்கள் உள்ளன. இங்கு சிறைக் கைதிகள் தினமும் 4 மணி நேரம் புத்தகம் வாசிக்கலாம். சில புத்தகங்களை தங்கள் சிறை கூடத்துக்கு எடுத்தும் செல்லலாம். இதில் கைதிகளால் அதிகம் வாசிக்கப்படும் புத்தகமாக காந்தியின் ’சத்திய சோதனை’ உள்ளது.
35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை ஒவ்வொரு வாரமும் 10 கைதிகள் வாசிக்கின்றனர். சிலருக்கு புத்தகம் கிடைக்காததால் ஏமாற்றமடைகின்றனர். இந்தப் புத்தகத்தை அடுத்து வேதங்கள் மற்றும் விவேகானந்தரின் புத்தகங்கள் அதிகமாக வாசிக்கப்படுகின்றன. சட்டப் புத்தகங்களும் அதிகம் வாசிக்கப்படும் புத்தகப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி இந்த சிறையில் சட்ட அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள சுனில் குப்தா கூறும்போது, ’கைதிகளின் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துகிறோம். அதன் மூலம் வாழ்க்கையில் அவர்கள் சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியும். பல கைதிகள், சிறையில் வாழ்க்கையை கழித்த ஆண், பெண்களின் வாழ்க்கை வரலாறை வாசிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்’ என்றார்.