மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும், இன்று (டிச.3) காலை முதல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மிசோரமில் மட்டும் நாளை (டிச.4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நிலவரப்படி, பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதியை வீழ்த்தி, காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, பாஜகவுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸின் தோல்விக்கான காரணம் குறித்தும் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், "சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால் இதுதான் விளைவு” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால் நிச்சயம் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்; பாஜகவுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி, பிரதமர் மோடியின் சிறந்த தலைமைக்கான சான்று” என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மட்டுமல்ல, சனாதனம் குறித்து காங்கிரஸைச் சேர்ந்த ஆச்சார்யா பிரமோத்தே கருத்து தெரிவித்திருப்பதான் ஆச்சர்யம் தரும் விஷயம். இதுகுறித்து அவர், ”சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சியை மூழ்கடித்துவிட்டது. சாதிவாரி அரசியலை நாடு ஏற்காது. சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் நடக்கும்” என அவர் மிகக் கடுமையாகவே விமர்சித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற ’சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ’சனாதனம்’ குறித்து பேசிய விவாதம், நாடு முழுவதும் பேசுபொருளானது. அவருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்ததுடன், அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. குறிப்பாக, சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு எதிராக, I-N-D-I-A கூட்டணியில் அங்கம்வகிக்கும் திமுகவை, காங்கிரஸ் கண்டிக்காதது, மத்தியில் ஆளும் பாஜகவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் கடந்த செப்.14ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ”I-N-D-I-A கூட்டணி, சனாதன தர்மத்தை அழிக்க முயற்சி செய்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக சனாதன தர்மம் இந்தியாவை ஒன்றிணைத்து வருகிறது. ஆனால் I-N-D-I-A கூட்டணி, இந்தியாவை பிளவுபடுத்த விரும்புகிறது. சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர், தேசத்தை நேசிப்பவர்கள். அவர்களை எதிர்க்கும் சக்திகளை எதிர்த்துப் போரிடவேண்டும்” எனப் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து பாஜகவினரும், இந்துத்வா அமைப்பினரும் சனாதனத்துக்கு ஆதரவாக கருத்துக்களைப் பதிவிட்டனர். முக்கியமாகச் சொல்ல வேண்டுமென்றால், வடஇந்தியாவில் இப்பிரச்னை பற்றி எரிந்தது. வடஇந்திய அரசியல் மற்றும் இந்து தலைவர்களால் சனாதனம் குறித்துப் பேசிய உதயநிதியின் தலைக்கு விலைகூட வைக்கப்பட்டது. அப்போதுகூட I-N-D-I-A கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள்கூட, உதயநிதிக்கு எதிராகவும் சனாதனத்துக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். ஆனால், இந்த விஷயத்தில் மவுனம் காத்த காங்கிரஸை, பாஜக கடுமையாக விமர்சித்தது. அதன்பயனாகத்தான் தற்போது காங்கிரஸ் 3 மாநிலங்களில் தோல்வியைத் தழுவியிருப்பதாக சிலர் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.