18வது மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெறாத நிலையில், பாஜக, தமது கூட்டணியுடன் ஆட்சியமைப்பதற்கான நிலையை அக்கட்சி எட்டியுள்ளது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது.
இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. இதையடுத்து, மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக பலத்த பின்னடவைச சந்திக்க பல காரணங்கள் இருந்தாலும், பிரபல யூடியூபர் துருவ் ரத்தே அடுக்கடுக்காக வெளியிட்ட வீடியோக்களும் அக்கட்சி தோல்வியைச் சந்திக்க காரணமாக இருந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஹரியானாவைச் சேர்ந்த துருவ் ராதி என்ற என்ஜினீயர் ஒருவர், அவரது பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவர் தற்போது வெளிநாட்டில் இருந்து தனது யூட்யூப் தளத்தை இயக்கி வருகிறார்.
யூடியூப்பில் மட்டும், அவர் 21.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளார். இவரது வீடியோக்கள் 4.1 பில்லியன் (41 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளன.
இந்த நிலையில், தேர்தல் நேரத்தின்போது மோடி அரசு குறித்து அவர் வெளியிட்ட பல வீடியோக்கள் பல மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்றுள்ளது. ’மோடி: தி ரியல் ஸ்டோரி என்கிற ஒரு வீடியோ மட்டும் 28 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலமாகத்தான் வட மாநிலங்களில் மாற்றம் நிகழ்ந்திருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், மோடி அரசுக்கு எதிராக மக்கள் திசை திரும்பியதாக ஆங்கில ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன. நேற்றுகூட இவர் வாக்கு எண்ணிக்கையின்போது தனது எக்ஸ் பக்கத்தில், “சாதாரண மனிதர்களின் அதிகாரத்தை தவறாகக் கணித்துவிடாதீர்கள்” எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பச்சைக்கொடி காட்டிய சந்திரபாபு நாயுடு.. மீண்டும் பதவியேற்கும் மோடி!