பாஜகவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருப்பது, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம். இதை நடைமுறைப் படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளைப் பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் தாத்தா, பாட்டி, கணவன், மனைவி, மகன், மகள் எனப் பல உறுப்பினர்கள் உள்ளனர்.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றோர் உறுப்பினருக்கு வேறொரு சட்டத்தையும் பின்பற்ற முடியுமா? அவ்வாறு இரண்டு சட்டங்களைப் பின்பற்றினால் அந்தக் குடும்பத்தை நடத்த முடியுமா? இந்தக் கருத்தை நமது நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுகிறேன். இரண்டுவிதமான சட்டங்களால் நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியுமா? நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்பு சாசனம் கூறுகிறது. இதற்கேற்ப பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ், திமுக ஆகிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இந்த விஷயத்திலேயே எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை நிலவவில்லை எனவும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது. வடமாநிலங்களில் வளர்ந்து நிற்கும் பல கட்சிகள் பொது சிவில் சட்டத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. சில கட்சிகள் சட்டத்தின் முன்வரைவுக்காகக் காத்திருக்கின்றன.
இந்த நிலையில் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code அல்லது Common Civil Code) குறித்து நாம் அறிவோம். பொது சிவில் சட்டமானது, ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது உரிமையியல் சட்டங்களைக் குறிக்கிறது. அதாவது,
பொது சிவில் சட்டம் என்பது, மதத்தின் அடிப்படையில் இல்லாமல் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரேமாதிரியான பொதுவான சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது ஆகும்.
நம் நாட்டில் இந்து, கிறிஸ்து, முஸ்லிம், சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி என பன்முக மதத்தவர்கள் உள்ளனர். இதில் இந்து மதம் பெரும்பான்மையானதாகவும், இதர மதங்கள் சிறுபான்மையானதாகவும் கருதப்படுகிறது. இதனால் இம்மதம் சம்பந்தப்பட்ட திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு, பழக்கவழக்கம், தத்தெடுக்கும் உரிமை, ஜீவனாம்சம் உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு மதத்தவருக்கும் தனித்தனியாகச் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன. அதாவது, ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு தனிநபர் சட்டத்தைப் பின்பற்றுகிறது.
இந்து மதத்தைப் பொறுத்தவரை தனியாகக் குடும்பவியல் சட்டம் இருக்கிறது. இந்துச் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்குத் திருமண வாரிசு, சடங்கு எனப் பல்வேறு அம்சங்களில் பெரியளவில் முரண்பாடு உள்ளது. இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் வரிச்சலுகைகள் உண்டு. இந்துக்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ஜீவனாம்சம் பெறவும் தனிச் சட்டங்கள் உண்டு. அதுபோல், மலைவாழ் மக்களின் பழக்கவழக்கம் என 400க்கும் மேற்பட்ட இந்துத் தனியார் சட்டங்கள் உள்ளன.
சீக்கியர்களின் மத உணர்வுகளை மதிக்கும் வகையில், அவர்களின் மதச் சட்டப்படி, சுய பாதுகாப்பிற்காக எந்நேரமும் கத்தி வைத்திருக்கவும், காவல் துறை மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்தாலும்கூட அங்குள்ள விதிகளுக்கு மாறாக சீக்கியர்கள் தாடி மற்றும் தலையில் டர்பன் வைத்துக் கொள்ளவும் அவர்களுக்கான தனி நபர் சட்டம் அனுமதி அளிக்கிறது.
இதேபோன்று, ‘ஷரியத்’ சட்டத்தைப் பின்பற்றுவது முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் ஒன்று. இந்தியாவில் இது ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ என்கிற பெயரில் 1937இல் இயற்றப்பட்டது. முஸ்லிம் தனிநபர்கள், அவர்கள் குடும்பம் பற்றிய அக்கறை, முஸ்லிம் சமூகம் சார்ந்த திருமணம், மணமுறிவு, வாரிசு, வக்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களைக் கையாள்வது குறித்த விவகாரங்களுக்கு பொருந்துவதாக இச்சட்டம் உள்ளது. எனினும், இதில் நீதிமன்றமே உச்சபட்ச அதிகார அமைப்பாக உள்ளது.
இப்படி, சட்டங்கள் ஒவ்வொரு மதத்தவருக்கும் தனித்தனியாக இருப்பது நிா்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதாக மத்திய அரசு கூறி வருகிறது. இப்படியான அனைத்து மதங்களின் தனிநபர் சட்டங்களுக்கும் பொதுவான நெறிமுறைகளைக் கொண்டதாக பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்கிறது மத்திய அரசு.
இதை, அரசமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவும் வலியுறுத்துகிறது. மக்களிடையே ஒற்றுமை உணா்வை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான சட்டங்களை வகுக்க அரசுகள் முயற்சிக்க வேண்டுமென அப்பிரிவு வலியுறுத்துகிறது.
பல வழக்குகளில் அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவு பற்றியும், பொது சிவில் சட்டம் பற்றியும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதுடன், பல்வேறு தீர்ப்புகள் மூலமாக பொது சிவில் சட்டத்தை நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகக் கொண்டு வரலாம் எனவும் வலியுறுத்தி உள்ளது.
நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயத்தில், அதன் அடிப்படையிலான விதிகளுக்கு மாறாக வேறொன்றை பின்பற்ற நிர்பந்திப்பதால்தான் இந்த பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது என்கின்றனர், மத நம்பிக்கையாளர்கள். அதாவது,
அரசியல் சாசனம், தாம் விரும்பும் வகையில் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் வழங்குகிறது. ஆனால், பொது சிவில் சட்டம் அந்த உரிமைகளைப் பறித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதால் சிறுபான்மையினரின் மதங்களைப் பின்பற்றும் அடிப்படை உரிமை பாதிக்கப்படலாம். பொது சிவில் சட்டம் காரணமாக, பழங்குடியினரின் அடையாளத்துக்கு ஆபத்து ஏற்படலாம். மேலும், ஒவ்வொரு மதத்தின் தனிப்பட்ட கலாசாரத்திற்கு ஏற்ப உள்ள தனிநபர் சட்டங்களை அதன் சாரம் குறையாமல், பொது சிவில் சட்டத்தில் இடம்பெறச் செய்வது என்பது சிக்கலானது.
தவிர, இந்திய தேர்தல் அரசியலில், பொது சிவில் சட்டம் என்பது மதக்கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் தடையும் நிலவுகிறது என்கின்றனர், அவர்கள். அதேநேரத்தில், பொது சிவில் சட்டத்தின் நோக்கம் நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்குமான தனிச் சட்டத்தை பாலினம், சாதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் வகையில் மாற்றி அமைப்பதே ஆகும் என மத்திய அரசு வாதிடுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “பொது சிவில் சட்டம் என்பது அனைவருக்கும் நன்மை தரக்கூடியது. சிறுபான்மையினருக்கும் நன்மை தரக்கூடியது. இது அனைவரையும் இணைப்பதற்கான சட்டம், பிரிப்பதற்கானது அல்ல. கருத்து வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் இணைந்து பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும்” என்றார்.
பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “பெண்களுக்கான பாதுகாப்பு, சொத்துரிமை ஆகியவற்றுக்கு, பொதுசிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்” என்றார்.
ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சந்தீப் பதக், “கொள்கை அளவில் நாங்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறோம். அரசியலமைப்பின் 44வது பிரிவும் அதையேதான் வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “பாஜகவின் சொல்லாலும் செயலாலும் நாடு பிளவுபட்டுள்ளது. பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, அந்தப் பிரிவு மேலும் அதிகமாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒரு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார் நம்முடைய மோடி. எனவே மதப் பிரச்னையை அதிகமாக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர் கருதிக் கொண்டிருக்கிறார். அதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்” என்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “"பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிராகவே உள்ளது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் தொடர்பான எங்களது நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவித்துள்ளோம். எந்த வடிவத்திலும் அதனை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.