இஸ்ரேல்- ஈரான் போருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? இந்த போர் இந்தியாவில் என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும்? விரிவாக பார்க்கலாம்.
ஏமனில் உள்ள ஹவுத்தி ஆயுதக்குழுவினருக்கும், ஹெஸ்புல்லாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்தான் செங்கடல் பகுதியில் அடிக்கடி வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்திவருகிறார்கள். இஸ்ரேலுக்கும்- ஈரானுக்குமாக போர் விரிவடைந்துள்ள நிலையில், இதன் மூலம் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உருவாகக்கூடும். ஐரோப்பா, அமெரிக்கா, ஆஃப்ரிக்கா, மேற்காசிய நாடுகளுக்கு சூயஸ் கால்வாய் மூலமே இந்தியா வர்த்தகம் செய்துவருகிறது.
இதன் மூலம் 2023 நிதியாண்டில் 400 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக CRISIL ரேட்டிங் தரவுகள் கூறுகின்றன.
தற்போதைய சூழல் செங்கடல் வழியே கப்பல் மூலம் நடைபெறும் வர்த்தகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே செங்கடலில் ஹவுத்தி ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் பெட்ரோலிய ஏற்றுமதி 38 சதவிகிதம் சரிந்தது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் நாடுகளுடனான நல்லுறவால் மேற்காசிய நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம் சுமுகமாக நீடித்துவருகிறது.
இதனால் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் 17.8% அதிகரித்திருந்தது. இதே காலகட்டத்தில் ஈரானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 15.2% அதிகரித்திருந்தது. தற்போது போர் காரணமாக வர்த்தகம் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
தவிர, கடந்த ஆண்டு ஜி20 மாநாட்டில் மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை இந்தியா அறிவித்திருந்தது. மத்திய கிழக்கில் உண்டாகியுள்ள பதற்றம் இந்த வழித்தடத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.