குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநில ஏடிஎம்களில் கடுமையான பணத் தட்டுப்பாடு நிலவுகிறது. பணத்தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணங்களாக சில விஷயங்கள் முன்வைக்கப்படுகிறது. அது குறித்து தெரிந்துகொள்வோம்.
மத்தியபிரதேசம், டெல்லி, பீகார், குஜராத், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநில ஏடிஎம்களில் கடுமையான பணத் தட்டுப்பாடு நிலவுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவதியுற்றனர். தற்போது அதனைப்போல மீண்டும் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை பெரிய அளவில் பாதிப்பில்லை என்றாலும் வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை பகுதிகள் பணத்தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. பணத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணங்களாக சில விஷயங்கள் முன்வைக்கப்படுகிறது. அவைகள்..
* பல மாநில வங்கிகளில் பணம் எடுக்கும் விகிதம் டெபாசிட் செய்வதை விட அதிகமாக உள்ளது.
* டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வங்கிகளுக்கு கொடுக்கும் பணத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததாக கூறப்படுகிறது. இதனால் வங்கிகள், ஏடிஎம்களில் தேவையான அளவு பணத்தை நிரப்புவதில் கோட்டைவிட்டதாக கூறப்படுகிறது.
* புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நோட்டுகளை ஏடிஎம்களில் செலுத்துவற்கான தொழில்நுட்ப வசதி இன்னும் பல ஏடிஎம்களில் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் புதிய நோட்டுகளை ஏடிஎம்களில் நிரப்புவதில் சிக்கல் நிலவுகிறது.
* எந்தப் பகுதிக்கு அதிகமான பணம் வழங்க வேண்டும்.. எந்த பகுதிக்கு குறைவான பணத்தை நிரப்பினால் போதுமானது என்ற முறையான திட்ட மேலாண்மை இல்லை என கூறப்படுகிறது.
* பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மக்கள் பெருமளவில் வங்கிகளில் டெபாசிட் செய்வதை குறைத்துக்கொண்டுள்ளனர். கைகளில் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது.
* கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கர்நாடக தேர்தல்களுக்காக ஏடிஎம்களில் இருந்த பணம் பதுக்கப்பட்டுள்ளது என்றும் புகார் கூறப்படுகிறது.
* வழக்கத்துக்கு மாறாக பண தேவை அதிகரித்துள்ளதால் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, மாநிலம் வாரியாக ஆர்பிஐ சார்பில் குழுக்கள் அமைத்து பணத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது தற்காலிக தட்டுப்பாடு என்றும் விரைவில் சரி செய்யப்படும் எனவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.