மேகதாது விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ள நிலையில் அது எப்படி சாத்தியமாகும் உள்ளிட்ட விவரங்களை சுருக்கமாக காணலாம்.
காவிரி விவகாரம் தீர்க்கப்பட முடியாத நூற்றாண்டு பிரச்னையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் பிரச்னை நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பிரச்னையை உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் பிரச்னைகள் இல்லாமல் இருந்து வருகிறது.
ஆனால், அந்த வழக்கு முடியப்போகிறது என்ற தருவாயிலேயே கர்நாடகா அரசு அடுத்த பிரச்னையை கையில் எடுத்தது அதுதான் மேகதாது அணை விவகாரம். காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டியே தீருவோம் என உறுதியாக இருக்கிறது கர்நாடக அரசு. என்ன ஆனாலும் சரி அணைகட்ட விடமாட்டோம் என பதிலுக்கு நிற்கிறது தமிழக அரசு. இரு மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான்.
இதற்கிடையில் அரசியல் ரீதியாக முக்கியத்துவத்தைக் கருதி கர்நாடக அரசு இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக கையில் எடுத்து வருகிறது. குறிப்பாக முதல்வர் எடியூரப்பா மாநிலத்தில் தனக்கு சரிந்து வரும் செல்வாக்கு மீட்டுக் கொள்வதற்காக மேகதாது அணை விவகாரத்தை மிக முக்கியமானதாக கையாள்கிறார். மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதுவது திட்டவரைவு தயாரிப்பது போன்ற பணிகளை அவர் தொடர்ந்து முடுக்கி விட்டுள்ளார்.
சமீபத்தில் கூட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அணை அமைக்க அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தது அம்மாநிலத்தில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர், தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது தேவையற்ற ஒன்று நேரடியாக மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று அணை அமைக்கும் பணியை தொடங்க வேண்டுமென அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.
மறுபுறம் தமிழக அரசு எக்காரணம் கொண்டும் இணைய நண்பர்களை மாற்றுவது என உறுதியாக இருக்கிறார்கள். டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் ஷகாவத்தை சந்தித்த தமிழ்நாடு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணைகட்டப் படாது என்ற உறுதிப்பாட்டை மத்திய அமைச்சரிடம் இருந்து பெற்றிருந்தார்.
இதற்கிடையில் கர்நாடகாவில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்கள் அமைப்பது தொடர்பான நிகழ்ச்சிக்காக பெங்களூர் சென்றிருந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது அணை விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ளது கர்நாடகா அரசு. இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படும் என மத்திய அமைச்சர் கூறியுள்ள நிலையில், அமைச்சரின் இந்த பதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அணை அமைக்கப்பட்டால் தமிழகத்திற்கு வர வேண்டிய நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போகும் என்பதுதான் தமிழக அரசின் மிக முக்கியமான வாதம். அப்படி இருக்க இரு மாநிலத்திற்கும் நீதி கிடைக்கும் என அமைச்சர் சொல்லுவதன் மூலம் அணை அமைக்க ஒப்புதல் வழங்கி விட்டு தமிழகத்திற்கு தேவையான நீர்வரத்தை உறுதி செய்யும் பணிகளில் மத்திய அரசு ஈடுபடுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
காவிரி நீர் விவகாரத்தை கையாண்டுவரும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் வசம் இந்த விவகாரத்தை ஒப்படைத்து நிர்வாக ரீதியிலான முடிவுகளை மத்திய அரசு எதிர்நோக்குகிறது என்ற கேள்வியும் எழுகிறது அல்லது நேரடியாக உச்சநீதிமன்றத்தை மத்திய அரசை நாடி, நீதிமன்றத்தின் வாயிலாக ஒரு முடிவினை எடுத்து தர முயற்சிக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மூன்றாவதாக இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றாக அமர்த்தி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண மத்திய அரசு எண்ணுகிறதோ என்ற யோசனையும் தோன்றுகிறது. ஆனால், இவ்வாறு பேச்சுவார்த்தையின் மூலம் இரண்டு தரப்பையும் அரசியல் ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த மேகதாது விவகாரத்தில் ஒருமித்த கருத்தை மத்திய அரசால் கொண்டு வர முடியுமா என்ற சந்தேகமும் தானாகவே எழுகிறது.
இரு மாநிலங்களும் மத்திய அரசை நெருக்கும் வேளையில் மத்திய அரசு மேகதாது அணை விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதை உற்று நோக்க வேண்டியுள்ளது.
- நிரஞ்சன் குமார்