‘செய்தியாளர் சித்திக் காப்பானின் நிலை என்ன?’ - மருத்துவ அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்

‘செய்தியாளர் சித்திக் காப்பானின் நிலை என்ன?’ - மருத்துவ அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்

‘செய்தியாளர் சித்திக் காப்பானின் நிலை என்ன?’ - மருத்துவ அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்
Published on

உத்தரப்பிரதேசத்தில் சிறையில் கொரோனா பாதித்த செய்தியாளர் சித்திக் காப்பானின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யார் இந்த சித்திக் காப்பான்? இவருக்கு என்ன நேர்ந்தது என்று பார்க்கலாம்.

செய்தியாளர் சித்திக் காப்பானின் நிலை என்ன?

கேரளாவைச் சேர்ந்த செய்தியாளர் சித்திக் காப்பான், கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 14 ஆம்தேதி 19 வயது இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம் நடந்தது. இதுகுறித்து செய்தி சேகரித்த போது தான் சித்திக் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத செயல் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு, தேசவிரோதச் செயல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட சித்திக்கை விடுதலை செய்யக்கோரி கேரள பத்திரிகையாளர் சங்கம் ஆட்கொணர்வு வழக்குத் தொடர்ந்தது.

செய்தியாளர் சித்திக்கின் கைதை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சிறையில் குளியலறையில் வழுக்கி விழுந்ததாக கடந்த 20 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சித்திக்கிற்கு 21 ஆம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா பாதித்த சித்திக், மருத்துவமனையில் கட்டிலோடு விலங்குகளைப் போல கட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், 4 நாட்களாக கட்டப்பட்ட நிலையில், உணவின்றி, இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் தவிப்பதாகவும், அவரது நிலை மோசமாக இருப்பதாகவும் சித்திக்கின் மனைவி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

சித்திக் தொடர்பான வழக்கில், சித்திக் மருத்துவமனையில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக கேரள பத்திரிகையாளர் யூனியனும் குற்றஞ்சாட்டியது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஏ.எஸ் போபண்ணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்திக் காப்பானின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com