மின்சார விநியோகத்தில் போட்டியை உண்டாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றால், ஒரு பகுதியிலே இரண்டு மின்சார விநியோக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மின்சார விநியோகம் செய்யலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தற்போது தொலைத்தொடர்புத் துறையில் எப்படி இணையதள சேவைகள் மற்றும் தொலைபேசி சேவைகள் ஒவ்வொரு பகுதியிலும் பல நிறுவனங்களால் அளிக்கப்படுகிறதோ அதேபோல மின்சார துறையிலும் நடைபெற வழிவகை செய்யப்படுகிறது. போட்டியினால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை மற்றும் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும் என மத்திய அரசு கருதுகிறது. ஆனால் இந்த சட்டத்திருத்தத்தினால் மின்சார விநியோகத்தை நாடு முழுவதும் தனியார் கையில் ஒப்படைக்க அரசு திட்டமிடுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்கெனவே மின்சார விநியோகம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு டெல்லியில் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் டாட்டா குழுமம் மற்றும் கிழக்கு டெல்லி பகுதியில் "பிஎஸ்ஈஎஸ்" நிறுவனம் மின்சார விநியோகம் செய்கின்றன. புதுடெல்லி மாநகராட்சி டெல்லி நகரின் மத்திய பகுதியில் மட்டும் மின்சார விநியோகம் செய்கிறது. இதேபோல உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மின்சார உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்துவரும் நிலையில், மின்சார விநியோகத்தையும் தனியார் வசம் ஒப்படைக்க முயற்சி நடப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. விவசாயிகளுக்கு கிடைக்கும் மின்சாரம் மற்றும் ஏழை மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் ஆகியவையும் மத்திய அரசு முன்வைத்துள்ள சட்ட திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ரத்து செய்யப்படும் என இந்தக் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் அதைமீறி இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் மற்றும் ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என மத்திய அமைச்சர ராஜ் குமார் சிங் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஏழை மக்களுக்கு சலுகை கிடைப்பது போலவே, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு இலவச மின்சார சலுகை அளித்துள்ளது. சமீபத்தில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அந்த மாநிலத்திலும் குறைந்த அளவில் மின்சாரம் பயன்படுத்தும் ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இலவச மின்சாரம் அல்லது சலுகைகள் அளிக்கும்போது, மானியத்தை மாநில அரசுகள் மின்சார விநியோக நிறுவனங்களுக்கு நேரப்படி அளிக்க வேண்டும் என சட்டத் திருத்த மசோதாவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மானியத்தின் சுமையை மின்சார விநியோக நிறுவனங்களின்மீது சுமத்துவதால், கடன் பாரத்தால் அந்த நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படுகிறது என்பதால் இந்த மாற்றம் அறிமுகப்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு தமிழ்நாட்டிலே டேன்ஜெட்கோ மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது என்பதால் மாநில அரசு நிலுவைத் தொகைகளை நேரத்துக்கு அளிக்காத நிலையில், பெரும் கடன் தொல்லை ஏற்படுகிறது. இதனால் சந்தையிலே மின்சாரத்தை விலைக்கு வாங்குவது மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகைகளை வழங்குவது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதைத் தவிர மின்சார உற்பத்தி, தேசிய அளவில் மின்சார விநியோகம், மாநிலங்களுக்கான ஒதுக்கீடு, மின்சார விற்பனை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கும் சட்டத் திருத்தங்கள் மசோதாவில் உள்ளன. ஆகவேதான் பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தொலைதொடர்பு துறையை போலவே மின்சார துறையிலும் தனியார் ஆதிக்கம் இந்த திருத்தங்களின் மூலமாக உண்டாக்கப்படும் எனவும், மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்படும் எனவும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கணபதி சுப்ரமணியம்