பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரஜினி பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஜனவரி 14-ம் தேதி சென்னையில் துக்ளக் இதழின் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்கள் எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அதில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது என்றும் பேசினார். ரஜினியின் இந்தப் பேச்சு சர்ச்சையானது.
இதனையடுத்து ரஜினி கூறியது பொய்யான தகவல் என்றும் எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் விமர்சித்திருந்தனர். ரஜினியின் பேச்சுக்கு எதிராக தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் அவுட்லுக் பத்திரிக்கையில் வெளியான தகவலை குறிப்பிட்டு பேசியதாகவும், ஆகவே தான் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், பெரியார் பற்றி ரஜினி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன், பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசியிருக்கிறார் என்று கூறி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி என்பவர் புகார் அளித்தார். இந்தப் புகார் கடந்த ஜனவரி 18ஆம் தேதி கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் மீது தான் அளித்த புகாரின் அடிப்படையில் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி உமாபதி சென்னை எழும்பூர் 2வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புகாரின் அடிப்படையில் ரஜினிகாந்த் மீது எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.