பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளை நழுவ விட்டாலும், தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக உருவெடுத்திருக்கிறது ராஷ்ட்ரிய ஜனதா தளம். வலிமையான எதிர்க்கட்சியாக அடுத்த ஐந்து ஆண்டுகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எப்படி செயல்படப் போகிறது.
லாலு என்ற ஆளுமை இல்லாமல், குறுகிய கால அனுபவத்துடன் தேர்தலை சந்தித்திருக்கிறார் தேஜஸ்வி யாதவ். வேலைக்காக வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து செல்வதை தடுக்கும் வகையில், தேர்தல் பரப்புரையின்போது 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்து இளைஞர்களை கவர்ந்தார் தேஜஸ்வி.
அதற்கான பலனாகவே தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்டுகளும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற, காங்கிரஸ் சோபிக்க தவறியதால், தேஜஸ்வி யாதவின் ஆட்சி கனவு பலிக்காமல் போனது.
அதே நேரம் அதிக இடங்களில் வெற்றிப் பெற்றிருப்பதால் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது ராஷ்ட்ரிய ஜனதா தளம். பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை விட, கூடுதலாக மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்த பலவீனம், தேஜஸ்விக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.
தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் செல்வாக்கு வெகுவாகவே சரிந்த நிலையில், கூட்டணியில் நிதிஷ்குமார் எடுக்கும் பல்வேறு முடிவுகளுக்கு, பாரதிய ஜனதா கட்டுப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. தவிர, சிறிய அளவில் அதிருப்தி ஏற்பட்டாலே ஆட்சிக்கு ஆபத்து இருப்பதால், எழும் சலசலப்புகளை உடனடியாக கட்டுப்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு பாரதிய ஜனதா தள்ளப்பட்டிருக்கிறது.
இதனால், தேஜஸ்வியின் பலம் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க நிதிஷ்குமாரின் கடந்த ஆட்சியில் மேம்பாலம் கட்டுவதில் ஊழல் நடைபெற்றதாக புகார் சொல்லப்பட்டது. தவிர வேலையில்லா திண்டாட்டம், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம், கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய பிரச்னைகளை சட்டப்பேரவையில் தேஜஸ்வி வலுவாக எழுப்பப் கூடும் என கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வரும் எந்தவொரு திட்டத்தையும், கட்டாயம் அமல்படுத்த வேண்டிய இடத்தில் தான் நிதிஷ்குமார் இருக்கிறார். பீகார் மக்களுக்கு அந்த திட்டங்கள் எதிராக இருக்கும்பட்சத்தில், அவற்றுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி, தனது செல்வாக்கை தேஜஸ்வி உயர்த்தக்கூடும்.
தமிழகத்தில் அதிமுக, திமுக என மாறி, மாறி ஆட்சியில் இருந்தாலும், இதுவரை தேசிய கட்சிகள் ஆட்சியில் அமர்ந்ததில்லை. அதே போன்ற நிலையில் தான் பீகாரில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் இருந்தன. ஆனால், இந்த தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறி, ஐக்கிய ஜனதா தளத்தின் செல்வாக்கு சரிந்திருக்கிறது. இதை வைத்து பாரதிய ஜனதா தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள முயற்சிகளை முன்னெடுத்தால், அதற்கு தேஜஸ்வி பெரும் முட்டுக்கட்டையாகவே இருப்பார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகள் பீகார் அரசியலில் தேஜஸ்வி நிறைய ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்புகளே பிரகாசமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.