நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தால், இரு அவைகளும் எதிர்க்கட்சிகளால் முடங்கின. முன்னதாக, எதிர்க்கட்சி எம்பிக்கள் இதுதொடர்பாக பேச முயன்றதால் அவை முடங்கியது. அவை தொடங்கும்முன்பு 15 எதிர்க்கட்சி எம்பிக்கள் சார்பாக நாடாளுமன்ற அலுவல் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மணிப்பூரில் நடந்துவரும் வன்முறைகள் குறித்து விவாதிக்கவும் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தனர். ஆனால் இது இரண்டு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. இதனால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள், ’இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மோடி பேச வேண்டும்’ எனக் குரல் கொடுத்தனர்.
மாநிலங்களவையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரைன், இதற்குமுன் பலமுறை விதி 267ன்கீழ் நாடாளுமன்ற அலுவல் ஒத்திவைப்பு தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளார். அவர், ‘தற்போதைய துணை ஜனாதிபதி, ராஜ்ய சபா சபாநாயகர் ஜெகதீப் தன்கர் வந்ததில் இருந்தே இதுவரை ஒருமுறைகூட இதுபோன்ற ஒத்திவைப்பு தீர்மானங்களுக்கு அனுமதி கொடுத்ததே இல்லை’ என்பதைச் சுட்டிக்காட்டி, ”267 விதியின்கீழ் அவை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தால், அவையில் அந்தத் தீர்மானத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட விஷயத்தை மட்டும்தான் பேச வேண்டும். அதுவரை வேறு எதைப் பற்றியும் ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது. இந்த தீர்மானத்தை எடுத்தால் அதுவரை அனைத்து அலுவல்களையும் தள்ளிவைத்துவிட்டு பேச வேண்டும். இங்கே மோடி வர வேண்டும்.. மோடி மணிப்பூர் பற்றி பேச வேண்டும்” என்றார். அவரின் பேச்சைத் தொடர்ந்து மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
267வது விதிமுறையானது, அவைத் தலைவரின் ஒப்புதலுடன் சபையில் முன்னதாகத் தீர்மானிக்கப்பட்ட செயல்பட்டு நிரலை, இடைநிறுத்துவதற்கு வேண்டி மாநிலங்களவையின் உறுப்பினருக்கு ஒரு சிறப்பு அதிகாரத்தினை வழங்குகிறது. அதன்படி, வேறு எந்த வகையான விவாதமும் அவையின் மற்ற நடைமுறையினை இடைநிறுத்தம் செய்யாது. மேலும் 267வது விதிமுறையின்கீழ் ஒரு பிரச்னை ஏற்றுக்கொள்ளப் பட்டால், அது அன்றைய மிக முக்கியமான தேசியப் பிரச்னை என்பதைக் குறிக்கும். தவிர, அவை விவாதத்தின்போது இதற்கான ஒரு விளக்கத்தினை அளிப்பதன் மூலம் அரசு, இந்த விவகாரத்திற்குப் பதிலளிக்க வேண்டும்.
267வது விதி குறித்து மேற்கோள் காட்டி பேசிய டெரிக் ஓ பிரைன், இந்த விதி குறித்த அறிவிப்புகளை முன்னைய தலைவர்கள் ஏற்றுக்கொண்டு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற பதிவுகள்படி, 1990 - 2016 வரை 11 நிகழ்வுகள் பல்வேறு விவாதங்களுக்கு இந்த விதி பயன்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா 1990 முதல் 1992 வரை 4 நோட்டீஸ்களையும், பைரோன் சிங் ஷெகாவத் 3 நோட்டீஸ்களையும், ஹமீத் அன்சாரி 4 நோட்டீஸ்களையும் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார். கடைசி நிகழ்வாக 2016ல் அப்போதைய தலைவர் ஹமீத் அன்சாரி பணமதிப்பு நீக்கம் குறித்த விவாதத்திற்கு அனுமதி அளித்தார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்க்கேவும் இதே விதியின் கீழ் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். இதேபோல் பல்வேறு எதிர்க்கட்சிகளும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.