டெல்லியைப் போல் பஞ்சாப்பிலும் மேஜிக் செய்த ஆம் ஆத்மி - அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன?

டெல்லியைப் போல் பஞ்சாப்பிலும் மேஜிக் செய்த ஆம் ஆத்மி - அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன?
டெல்லியைப் போல் பஞ்சாப்பிலும் மேஜிக் செய்த ஆம் ஆத்மி - அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன?
Published on

டெல்லியில் செய்து காட்டிய மந்திர ஜாலத்தை பஞ்சாப் மாநிலத்திலும் செய்து காட்டியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. இந்நிலையில், அந்தக்கட்சியின் அடுத்த கட்ட திட்டங்கள் என்ன என்பது குறித்து இங்கு காண்போம். 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்லியின் அசைக்க முடியாத சக்திகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் பாஜகவை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது. அதற்கு அடுத்து, 2015-ம் ஆண்டு 67 தொகுதிகளை கைப்பற்றி 54 சதவீத வாக்குகளுடன் மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடித்தது.

இதே உத்வேகத்துடன் 2017-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் களம் கண்ட போது அகலக்கால் வைக்கிறது ஆம்ஆத்மி என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், 117 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் 20 இடங்களை கைப்பற்றி முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி. இது நடந்து சரியாக ஐந்தே ஆண்டுகளில் தற்போது 42 சதவீத வாக்குகளுடன் 92 இடங்களை கைப்பற்றி சூறாவளி வேகத்துடன் பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றியுள்ளது அக்கட்சி.

இந்நிலையில், தங்களது இந்த அசுர பாய்ச்சலை அடுத்தடுத்தும் விரிவுபடுத்த ஆம் ஆத்மி திட்டமிட்டிருக்கிறது. அதுதான், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் குஜராத் மாநிலத்தில் களமிறங்கும் யோசனை. அதே போல, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ஹிமாச்சல் பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், 2023-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலிலும் முழவீச்சில் களமிறங்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள பெங்களூரு முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் களமிறங்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தீவிர கவனம் செலுத்தவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, எங்கெங்கெல்லாம் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நேரடி போட்டி நிலவுகிறதோ, அங்கெல்லாம் 'நாங்கள்தான் மாற்று' என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது ஆம் ஆத்மி.

--- நிரஞ்சன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com