இஸ்ரோ ராக்கெட் தயாரிப்பில் ஒரு புதுமையை கையாண்டிருக்கிறது. என்ன அது என்பதை பார்க்கலாம்.
இஸ்ரோ தனது நீண்டகால முயற்சியாக பிஎஸ் 4 இன்ஜினின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது, இந்த இன்ஜினானது அதிநவீன சேர்க்கை உற்பத்தி (ஏஎம்) நுட்பங்களைப் பயன்படுத்தி மறுவடிவமைக்கப்பட்டது - இதை 3டி பிரிண்டிங் என்றும் சொல்லப்படுகிறது. இதைப்பற்றி விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுவது என்ன என்பதை பார்க்கலாம்.
”கடந்த மே 10 இஸ்ரோ ராக்கெட் வடிவமைப்பில் ஒரு புதிய மைல்கல்லை பதித்தது. Additive Manufacturing - அதாவது சேர்க்கை உற்பத்தி முறை கொண்டு ராக்கெட் எஞ்சின் ஒன்றை தயாரித்து சோதனை செய்துள்ளார்கள். 3D printing எனப்படுவது தான் Additive Manufacturing.
சாதரணமாக இரண்டு முறையில் பொருள் உற்பத்தி நடைபெறும். அதாவது உலோகத்துண்டை நமக்கு தேவைப்படும் வடிவமைப்பில் செய்யும் பொழுது அதில் சில உலோகத்துண்டுகள் வீணாகலாம். மற்றொன்று ஒரு கல்லை சிற்பமாக வடிக்கும் பொழுது, நிறைய மண்துகள்கள் வீணாகலாம். இப்படி வீணாகும் துகள்களின் செலவை குறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது தான் 3D printing.
சாம்பார் தனியே செய்து, வடையை தனியே செய்து இரண்டையும் இணைத்து சாம்பார் வடை செய்வது போல பல பாகங்களை பிணைந்து உதிரி பாகத்தை பொருள் உற்பத்தி செய்யலாம். முன்பு இருந்த மாடலில் வெல்டிங் அல்லது ஸ்க்ரு கொண்டு பிணைப்பை ஏறப்படுதுவார்கள் இதில் எங்கெல்லாம் இணைப்பு உள்ளதோ அங்கெல்லாம் வெல்டிங் அகன்று உடைந்து விடும் வாய்ப்பு உள்ளது.
Additive Manufacturing எனும் நவீன பொருள் உற்பத்தியில் அடுக்கு அடுக்காக உற்பத்தி மேற்கொள்ளப்படும். துகள் அளவில் உள்ள மூலப்பொருளை அடுக்கி அதன் மீது வெகு வெப்பம் பாய்ச்சி உருக செய்து கட்டிப் படுத்துவார்கள். அதன் பின்னர் அதன் அடுத்த அடுக்கை அதன் மீது கட்டி எழுப்புவார்கள். பிரெட் சண்ட்விச் போல அடுக்கு அடுக்காக சேர்க்கை செய்து உற்பத்தி செய்வதால் இதனை Additive Manufacturing அதாவது சேர்க்கை உற்பத்தி என்கிறோம்.
PSLV ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் PS4 என்ஜினை தான் இந்த புதுமுறையில் உற்பத்தி செய்து வெற்றிகரமாக சோதனையோட்டம் செய்துள்ளனர். முதல் அடுக்கு நிலையில் ராக்கெட்டை சரியான திசையில் ஏவ இந்த PS4 எஞ்சின் பயன்படுகிறது.
தற்போது இருக்கும் பழைய முறையில் இந்த என்ஜினை தயார் செய்ய சுமார் 565 கிலோ பொருள் தேவைப்படும். மேலும் பதினான்கு உதிரி பாகங்களை தயார் செய்து பத்தொன்பது இடங்களில் வெல்டிங் செய்து பிணைத்து இந்த என்ஜினை தயார் செய்ய வேண்டும், ஆனால் சேர்க்கை உற்பத்தி முறையில் வெறும் 13.7 கிலோ மட்டுமே போதும்.
மேலும் ஒரே ஒரு இடத்தில மட்டுமே வெல்டிங் தேவை. அதனால் விலை குறையும்; பொருள் வீணாவதில்லை; எனவே சூழல் பாதுகாப்பும் கூட. ஒரே இரு இடத்தில மட்டுமே வெல்டிங் என்பதால் விரிசல் விட்டு உடைந்து போய் பாழாகும் வாய்ப்பு இல்லை. மேலும் பழைய முறையில் தயார் செய்வதை விட வெறும் 60 சதவிகித நேரத்தில் விரைவாக இதை தயார் செய்து விடிய முடியும்.
3D printing மூலம் உற்பத்தி செய்த ராக்கெட் என்ஜினில் எரிபொருள் நிரப்பி இயக்கி சோதனை செய்துள்ளனர். வெகு வெப்பத்தில் இயங்கும் போதும் விரிசல் விடாமல் சரியாக இயங்கியுள்ளது.” என்கிறார்.
ஆக வரும் நாட்களில் 3D printing மூலம் தயாரிக்கப்படும் ராக்கெட்தான் செயல்படுத்தப்படும் என்பது தெள்ளத்தெளிவாகிறது