கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற விஷச்சாராய சம்பவத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்ததாகவும், 90 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆண்களுடன் பெண்களும் மரணத்திருப்பதும், தாய்-தந்தை என இரண்டு பேரையும் இழந்துவிட்டு சிலர் கண்ணீர்வடிப்பதும் பார்ப்போரின் நெஞ்சத்தை ரணமாக்கியுள்ளன.
இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகம் வழங்கியுள்ள தகவல்கள் படி கடந்த 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரை இந்தியா முழுவதும் எத்தனை கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டுள்ளன, அதில் தமிழகத்தில் எத்தனை உயிர்கள் பறிபோயின, தற்போது நடந்திருக்கும் சம்பவம் எதற்கான முன்னெச்சரிக்கையாக பார்க்கப்படவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்..
தேசிய குற்ற ஆவண காப்பகம் வழங்கியுள்ள தகவல்கள் படி கடந்த 2018-ம் ஆண்டு 28 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உட்பட 8 யூனியன் பிரதேசங்கள் என மொத்தமாக இந்தியா முழுவதும் 1365 கள்ளச்சாராயம் மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் 410 பேரும், கர்நாடகாவில் 218 பேரும், ஹரியானாவில் 162 பேரும் , பஞ்சாபில் 159 பேரும் , உத்தர பிரதேசத்தில் 78 பேரும் மரணம் அடைந்திருக்கிறார்கள்.
அந்த ஆண்டு தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மரணங்கள் எதுவும் நிகழவில்லை.
2019-ம் ஆண்டை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக 1296 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.
அதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 268 பேரும், பஞ்சாபில் 191 பேரும், மத்திய பிரதேசத்தில் 190 பேரும், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் தலா 115 பேரும், ராஜஸ்தானில் 88 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.
அந்த ஆண்டும் தமிழ்நாட்டில் ஒரு கள்ளச்சாராயம் மரணம் கூட ஏற்படவில்லை.
2020-ம் ஆண்டு பொருத்தவரை நாடு முழுவதிலும் கள்ளச்சாராயம் மரணங்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்திருந்தது.
அதில் ஒட்டுமொத்தமாக 947 பேர் உயிரிழந்திருந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் 214 பேரும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 139 பேரும், பஞ்சாபில் 133 பேரும், கர்நாடகாவில் 99 பேரும், சத்தீஸ்கரில் 67 பேரும் உயிரிழந்தனர்.
ஆனால் அதே ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 20 பேர் கள்ளச்சாராயம் அருந்தி மரணித்தார்கள்.
2021-ம் ஆண்டை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக 782 பேர் உயிரிழந்திருந்தனர்.
அதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 137 பேரும், பஞ்சாபில் 127 பேரும், மத்திய பிரதேசத்தில் 108 பேரும், கர்நாடகாவில் 104 பேரும், ஜார்கண்டில் 60 பேரும் உயிரிழந்திருந்தார்கள்.
தமிழ்நாட்டில் அந்தாண்டு 6 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்திருந்தார்கள். கடந்த ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 26 மரணங்களே நிகழ்ந்த நிலையில், நேற்றைய ஒரே நாளில் மட்டும் 39 மரணங்கள் நிகழ்ந்திருப்பது, கள்ளச்சாரயம் விவகாரத்தில் தமிழக அரசு பெரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.