நாடாளுமன்றம் பாதிக்கப்பட்டது கவலை அளிப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
வேளாண் மசோதா எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று மாநிலங்களவையில் நிறைவேறியது. இதனால் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மேலும் அவையின் துணைத்தலைவர் முன்பு காகிதங்களை கிழித்து எரிந்தனர். இதனால் அவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவைத் துணைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன.
இந்நிலையில், ராஜ்நாத்சிங் உள்ளிட்ட ஆறு மத்திய அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். நாட்டின் எந்த பகுதிக்கும் சென்று விவசாயிகள் விலை பொருட்களை விற்க முடியும். மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்புகின்றனர். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து கிடைக்கும். அமளியால் நாடாளுமன்றம் பாதிக்கப்பட்டது கவலை அளிக்கிறது.
மாநிலங்களவையில் எதிர்கட்சியினர் நடந்து கொண்டது கவலை அளிக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த நோட்டீஸ் தலைவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் முடிவு எடுப்பார். அரசியல் ரீதியாக நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. எனக்குத் தெரிந்து மக்களவை அல்லது மாநிலங்களவையில் வரலாற்றில் இதுபோன்று ஒருபோதும் நடந்ததில்லை” எனத் தெரிவித்தார்.