மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் திங்கள்கிழமை மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் குறித்து கடும் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து, 12 பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 12 உறுப்பினர்களையும் ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்வதாக இடைக்கால சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் அறிவித்தார். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, இதற்கான தீர்மானம், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில்நிறைவேற்றப்பட்டது.
மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிரா அரசு அறிவித்த இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில மக்கள் தொகையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள தங்களுக்கு தனி இடஒதுக்கீடுப் பிரிவு வேண்டும் என கோரி மராத்தா பிரிவினர் நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக, மகாராஷ்டிரா அரசு அவர்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று, அங்கே இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசு இடஒதுக்கீட்டுக்கு முடிவுக்கு ஆதரவாக தாக்கல் செய்த சீராய்வு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை கூடிய மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், மராத்தா இடஒதுக்கீடு ரத்து குறித்து ஆளும் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். ஒரு கட்டத்திலேயே கடும் அமளி ஏற்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைக்கால சபாநாயகர் பாஸ்கர் ஜாதவின் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கேயும் பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் முறைகேடாக நடந்து கொண்டதாகவும், பாஸ்கர் ஜாதவை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தாக்கியதாகவும் அவர்கள் மீது குற்றம்
சாட்டப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களோ தாங்கள் ஏற்கெனவே நடந்த அமளிக்கு மன்னிப்பு கூட கேட்டதாகவும், அதேசமயத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் அமளியில் ஈடுபட்டதாகவும் பதிலுக்கு குற்றம்சாட்டினார்கள்.
இடைக்கால சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ், 12 பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் முறைகேடாக பேசியதாகவும், அமளியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி ஒரு வருடத்துக்கு அவர்களை இடைநீக்கம் செய்தார். முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையிலேயே இவ்வாறு கண்ணியம் இல்லா முறையில் பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடந்து கொண்டார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார்.
இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தேவேந்திர பட்னாவிஸ், அனைத்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டாலும் கூட தொடர்ந்து மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக போராடுவோம் என வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியரியை சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே பல்வேறு விவகாரங்களில் மகாராஷ்டிரா ஆளும் கூட்டணிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அரசு தேவையற்ற முறையில் 155 கோடி ரூபாயை விளம்பரத்துக்காக செலவிட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார் பட்னவிஸ்.
பெரும்தொற்று காலத்திலே வருமானம் இல்லை என்று புகார் அளித்து வரும் மகாராஷ்டிர அரசு, இவ்வளவு பெரிய தொகையை விளம்பரத்துக்காக ஏன் செலவிட வேண்டும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். சட்டப்பேரவை உறுப்பினர்களின்
இடைநீக்கத்தை எதிர்த்து கூட்டத்தொடரை புறக்கணிப்போம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மகாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்திலேயே இடஒதுக்கீடு
விவகாரத்தில் உத்தவ் தாக்கரே அரசு சரியாக செயல்படவில்லை என்று கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடும் மோதல் ஏற்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கணபதி சுப்ரமணியம்