18 ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, ஏப்ரல் 26, மே 7, 13, 20 மற்றும் 25 என 6 கட்டத் தேர்தல் நிறைவடைந்தது. மொத்தமாக 486 தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
பிகார் மாநிலத்தில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா போன்ற கட்சிகள் அங்கம் வகித்தன. இதில் பாஜக 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா தலா 1 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
அதேவேளையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும், இடதுசாரி கட்சிகளுக்கு 9 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
india today - axis my india பிகார் மாநிலத்திற்கான , தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 29 முதல் 33 தொகுதிகளை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
INDIA கூட்டணி 7 முதல் 10 தொகுதிகளை வெல்லும் என தெரிவித்துள்ளது. பிற கட்சிகள் 0 முதல் 2 தொகுதிகளை வெல்லும் என தெரிவித்துள்ளது.
India TV கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜக 15 முதல் 17 தொகுதிகள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 11 முதல் 12 தொகுதிகள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2 முதல் 4 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் 1 முதல் 2 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.