தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணம் என்ன?

கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகி வருகிறது. தங்க விலையானது அதிகரிக்க காரணம் என்ன? பார்க்கலாம்...
தங்கநகை
தங்கநகைPT
Published on

இந்தியாவை பொறுத்தவரை முதலீடு என்றால் அனைவரும் வாங்க நினைப்பது தங்கம்தான். மட்டுமன்றி இந்தியாவில் தங்க ஆபரணங்கள் அணிவதை பெருமையாகவும், உயர்வாகவும் கருதுவோரும் அதிகம். நிலைமை இப்படியிருக்க கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகி வருகிறது. தங்க விலையானது அதிகரிக்க காரணம் என்ன? இதுகுறித்து நம்மிடம் Alex Mathew, Deputy News Editor, NDTV Profit பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:

Alex Mathew, Deputy Editor - NDTV Profit
Alex Mathew, Deputy Editor - NDTV ProfitPT

தங்கம் விலை ஏன் அதிகரிக்கிறது? தங்கத்தின் விலையை பாதிக்கும் காரணிகள் என்ன?

"தங்கம் பொதுவாக பாதுகாப்பான சொத்தாக மக்களால் பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தின் நிச்சயமற்றதன்மை காரணமாக தங்கத்தின் தேவை ஒவ்வொரு காலகட்டத்திலும் உயர்கிறது. குறிப்பாக உலக அரசியல் பதற்றம் மற்றும் போர்பதற்றம் காரணமாக தங்கத்திற்கான தேவை அதிகரிக்கிறது. இதுபோன்ற காரணங்களால்தான் விலை அதிகரிக்கிறது. தங்கத்தை நாம் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு கவசமாக பார்க்கலாம். கடந்த காலங்களில் பணவீக்கம் அதிகரித்தபோது விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது"

தங்கத்தின் விலை அமெரிக்க டாலர் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடிகளால் பாதிப்பு அடைகிறதா?

"கடந்த இரண்டு ஆண்டுகளில், அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஆகியவற்றால், தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது என்பது உண்மைதான். இதற்கு காரணம் உலகளவில் அமெரிக்கப் பத்திரங்கள், கருவூலங்களில் முதலீடு செய்தால் அபாயம் குறைவு என்ற ஒரு கண்ணோட்டம்தான்.

ஆனால், அமெரிக்காவில் நிலவிய நிதி நெருக்கடி காரணமாக அங்கு பணவீக்கம் ஏற்பட்டது. பணவீக்கத்தைக் குறைக்க அமெரிக்க மத்திய வங்கிகளே வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்கப் பத்திரங்கள் மீதான வருவாய் மற்றும் டாலரின் மதிப்பும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த இரண்டு காரணிகளின் விளைவாக, உலகளாவிய முதலீட்டாளர்கள் அமெரிக்கப் பத்திரங்களை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வருகின்றனர். அதாவது, டாலரின் மதிப்பு மற்றும் பத்திர விளைச்சல் வீழ்ச்சியடையும் போது, பத்திரங்களில் முதலீடு செய்வது குறையும். மேலும் பாலஸ்தீனத்தில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலையானது அதிகரித்துள்ளது"

தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

"தங்கத்தை சேமிப்பாக சேர்க்க விரும்பும் முதலீட்டாளர்கள் நகைகளை முதலீடாகக் கருதக்கூடாது. ஏனென்றால், நகைகளின் விலையில் கூலி சேதாரம் கட்டணமும் அடங்கும்.

முதலீடாக தங்கத்தை வாங்கும் போது சவரன் தங்கப் பத்திரம் ஒரு சிறந்த தேர்வாகும். ரிசர்வ் வங்கி புதிய தவணையைத் திறக்கும் போதெல்லாம் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். மேலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் இருக்கலாம் என்பதனால் 10% வரை தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது."

இந்தியாவில் தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? அடிப்படை விவரம் பகிருங்கள்...

"இந்தியா அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு. இதன் விளைவாக, இந்தியாவில் தங்கத்தின் விலை பெரும்பாலும் உலக விலை அளவிலேயே தீர்மானிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை நகரத்திலிருந்து நகரத்திற்கு சிறிது மாறலாம், ஆனால் உலகளாவிய விலைகளுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படும்"

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com