மேற்கு வங்காளம் | கழிவறையில் குறைமாதத்தில் பிறந்த குழந்தை... வாயில் கவ்வி சென்ற தெரு நாய்!

மேற்கு வங்காளத்தில் மருத்துவர்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டு, மருத்துவமனை கழிவறையில் குறைமாதத்தில் பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்விக்கொண்டு செல்லும் காட்சிகள் காண்போரை பதைப்பதைக்க வைத்துள்ளது.
மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளம்முகநூல்
Published on

மேற்கு வங்காளத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், மருத்துவர்களின் உதவியும் மேற்பார்வையுமின்றி குறைமாதத்தில் கர்ப்பிணியொருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அதுவும், மருத்துவமனையின் கழிவறையில் குழந்தை பிறந்துள்ளது. இதில் இன்னும் சோகமாக, அச்சமயத்தில் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று அக்குழந்தையை கவ்வி சென்றுள்ளது. இது எதுவுமே அறியாமல் மருத்துவமனை ஊழியர்கள் செயல்பட்டது வெளிச்சத்துக்கு வந்து கேட்போரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

கடந்த 18 ஆம் தேதி கர்ப்பிணி ஒருவர், மேற்கு வங்கத்தின் பங்குரா மாவட்டம் சோனாமுகி கிராமப்புறத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென கழிவறையிலேயே வைத்து குறைப்பிரசவத்திலேயே குழந்தை பிறந்துள்ளது.

அந்தசமயம் பார்த்து, மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று பிறந்த பச்சிளங்குழந்தையை வாயில் கவ்விக்கொண்டு ஓடியுள்ளது. இதுதொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனை ஊழியர்களிடம் கூறியதாகவும் இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் மருத்துவ அதிகாரிகளிடத்தில் புகாரளித்துள்ளனர்.

இதனையடுத்து, பிஷ்ணுபூர் சூப்பர் ஸ்பிஷாலிட்டி மருத்துவமனையில் அந்தப்பெண் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இது குறித்து பெண்ணின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், “குழந்தை பிறந்தபோது உதவிக்காக பலமுறை அழைத்தும் எந்த ஊழியர்களும் எங்களுக்கு உதவ வரவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, மேற்கு வங்காளத்தில் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான போராட்டம் பெரும் அதிர்வலைகளை கிளப்பிய நிலையில், இந்த சம்பவம் மீண்டும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இரண்டையும் தொடர்புபடுத்தி பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரதிமா பூமிக் தெரிவிக்கையில்,

“மேற்கு வங்காளத்தில் உள்ள (பங்குராவில்) சோனாமுகியில் மம்தா பானர்ஜியின் உலக தரம் வாய்ந்த ‘சுகாதார தலைமை’யின் கீழ், இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்திருக்கிறது. மருத்துவமனையின் கழிப்பறையில் மருத்துவ உதவியின்றி, குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார் ஒரு கர்ப்பிணி. அதனை தெரு நாய் ஒன்று கவ்விக்கொண்டு சென்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம், மேற்கு வங்காளத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com