வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்து சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் சமூக ஆர்வலர் சஞ்ஜய் ராய், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த வழக்கில் நீதி வேண்டி அம்மாநில பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, போராட்டக் குழுவினர் வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்ற மேற்கு வங்க அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. அந்த வகையில், கொல்கத்தா காவல் ஆணையாளர் வினீத் கோயல் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக மனோஜ் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவை மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது.
முன்னதாக மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையின் முதவல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் வேறொரு மருத்துவமனைக்கு அவர் முதல்வராக நியமிக்கப்பட்டார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சந்தீப் கோஷை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்குப் பதில், அவரை நீண்டநாள் விடுமுறையில் இருக்கும்படி கொல்கத்தா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தொடர்ந்து, சந்தீப் கோஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே, சந்தீப் கோஷை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தொடந்து விசாரணை நடத்தினர். அதன்பேரில், விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், 'பெண் மருத்துவர் கொலையில் சந்தீப் கோஷ் பல்வேறு விஷயங்களை மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
கொலையை தற்கொலையாக மாற்ற முயற்சிகள் நடந்துள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்தீப் கோஷின் மருத்துவப் பயிற்சி பதிவை ரத்துசெய்து மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று (செப். 19) முதல் இது நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தீப் கோஷ் மருத்துவப் பணி செய்ய முடியாது.