மேற்கு வங்க தலைமைச் செயலக நுழைவாயில் பூட்டப்பட்டதால் ஆளுநர் ஜெகதீப் தங்கார் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.
மேற்கு வங்க தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்ய விரும்புவதாக அந்த மாநில சபாநாயகர் பிமன் பானர்ஜிக்கு ஆளுநர் நேற்று தகவல் அனுப்பினார். சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் சூழலில், இரண்டு நாட்களுக்கு சட்டப்பேரவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் நேற்று மாலை அறிவித்தார்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் ஆளுநர் செல்வதற்கான மூன்றாம் எண் நுழைவாயிலுக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கார் இன்று காலை வந்தபோது, கேட் பூட்டப்பட்டிருந்தது. கேட் பூட்டப்பட்டிருந்ததால் அங்கேயே நீண்ட நேரம் ஆளுநர் காத்திருந்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் கேட்டை திறக்கக்கூடாது என்று விதியேதும் இல்லை என்றார். மேலும், இது ஜனநாயக வரலாற்றில் இது அவமானகரமானது என்றும் தங்கார் விமர்சித்தார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் தாக்கலாக இருந்த மசோதாக்கள் சிலவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறப்படும் நிலையில், பேரவை வளாகத்துக்கு ஆளுநர் வருவதை தடுக்கும் விதமாக சபாநாயகர் பேரவையை இரண்டு நாள் ஒத்திவைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.