மேற்கு வங்க மாநிலத்தில் ஹூல்லா என்று சொல்லப்படும் வனவிலங்குகளை விரட்டும் அமைப்பு ஒன்று இருக்கிறது. ஊருக்குள் புகுந்து, விளைநிலங்களை மற்றும் வீடுகளை நாசம் செய்யும் யானைகள் மற்றும் காட்டு விலங்குகளை கூரான ஆயுதம் மற்றும் கம்பிகள் விலங்குகள் மேல் தீப்பந்தத்தை வீசுவது போன்று விலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்களைக்கொண்டு விரட்டி அடித்து வருவார்கள்.
இவர்களின் இத்தகைய மோசமான செயலினால் பல விலங்குகள் உயிரிழந்து வருவதை அடுத்து இந்த அமைப்பிற்கு 2018ல் உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இருப்பினும், இந்த அமைப்பானது விலங்குகளுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
சமீபத்தில் கடந்த வியாழக்கிழமை ஹூல்லா அமைப்பால் விரட்டப்பட்ட யானை ஒன்று உயிரிழந்தது குறித்து, விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் பிரேர்னா சிங் பிந்த்ரா தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் இந்த சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், ”மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள ராஜ் கல்லூரி காலனிக்குள் கடந்த வியாழக்கிழமை அதிகாலை இரண்டு குட்டியானை உட்பட 6 யானைகள் அங்கு வந்து, காலனியில் சில சுவர்களை முட்டி உடைத்து இருக்கிறது. அத்துடன் இல்லாமல் அப்பகுதியில் இருக்கும் ஒரு வயதானவரை யானையானது கொன்றுள்ளது.
யானைகளின் அட்டகாசத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவற்றை விரட்டுவதற்காக இரும்பு கம்பிகள் மற்ற எரியும் தீப்பந்தங்களுடன் வந்த ஹூல்லா குழுவினர் அந்த யானைகளை மிகமோசமான முறையில் துரத்தியுள்ளனர்.
ஹூல்லா குழுவில் உள்ள ஒருவர் துப்பாக்கியால் யானைகளை பலமுறை சுட்டார். அதில் ஒரு யானை அடிபட்டு கீழே விழுந்தது. இது அனேகமாக முதியவரைக்கொன்ற யானையாக இருக்கக்கூடும்” என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.
”மற்றொருவர் கூரான இரும்பு ஆயுதத்தில் தீப்பந்தத்தை பற்ற வைத்து ஒரு யானையின் மீது எரிந்தார். அந்த தீக்கம்பியானது மற்றொரு யானையின் முதுகுதண்டை பதம் பார்த்தது. அதில் அந்த யானையின் முதுகுதண்டு பலத்த சேதம் அடைந்து அந்த யானையும் கீழே விழுந்தது. அடிபட்ட யானைகளை வனத்துறையினர் மருத்துவ உதவிக்காக அழைத்து சென்றுள்ளனர். இதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. மற்றொரு யானையால் எழுந்து நடக்கமுடியாததால் அதை புல்டோசரைக்கொண்டு அப்புறப்படுத்தியனர் “ என்று அவர் எழுதியிருந்தார்.
மேலும், ”யானைகளை பாதுகாப்பதாகவும் வணங்குவதாகவும் கூறிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அது தங்குவதற்கோ அல்லது உணவிற்கோ , பாதுகாப்பிற்கோ, நாம் மனரீதியாக கொடுப்பதற்கு தயாராக இல்லை.
வனவிலங்குகளை மக்களிடமிருந்து பாதுகாக்க வனத்துறை கடினமான முடிவுகளை எடுக்குமா?... ” என்று தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.