தயவுசெய்து நோயாளிகளை கவனியுங்கள் என மாநில மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களிடம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த திங்கள் கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் மருத்துவர் ஒருவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையில் அடிப்பட்டு மருத்துவர் உயிரிழந்தார். இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவரின் இறப்புக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நான்காவது நாளான இன்று கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அங்கிருந்தவர்கள் எங்களுக்கு நியாயம் வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதனால் கோபமடைந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்தப் போராட்டத்தை அரசு ஒருபோதும் எந்த வகையிலும் அனுமதிக்காது எனவும் இது சிபிஎம் மற்றும் பாஜகவினரின் சதி எனவும் குற்றம்சாட்டினார். அடுத்த 4 மணி நேரத்தில் பணிக்கு திரும்பாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். ஆனால் முதலமைச்சர் கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாநில மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து அனைத்து நோயாளிகளையும் கவனியுங்கள். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏழ்மையான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவமனையை நீங்கள் கவனித்தால் உங்களுக்கு மிகவும் நேர்மையாகவும் கடமைப்பட்டும் இருப்பேன். மருத்துவமனைகள் மென்மையாகவும் அமைதியாகவும் நடைபெற வேண்டும். உங்களின் ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.