புல்வாமா தாக்குதல் குறித்து தனக்கு நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
புல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பலரும் பாகிஸ்தானுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து தனக்கு நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சரியாக மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த தாக்குதல் எப்படி நடக்கிறது என்பது தான் புரியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய மம்தா பானர்ஜி, ''காஷ்மீர் தாக்குதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தபிறகு நடந்துள்ளது. இது எப்படி என்பது புரியவில்லை. ஒரு குடிமகளாக எனக்கு சந்தேகம் வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சரியாக தேர்தல் நேரத்தில் நடவடிக்கைகள் தீவிரமடைவது ஏன்'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ''உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தும், 2000த்துக்கும் அதிகமான வீரர்களை ஒரே நேரத்தில் சாலை மார்க்கமாக இடம் மாற்றியது ஏன். இப்போதெல்லாம் மோடியும், அமித்ஷாவும் மட்டுமே தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் தான் தேசப்பற்றுள்ளவர்கள் என்பது போலவும் நாமெல்லாம் வெளிநாட்டினர் போலவும் நடந்து கொள்கிறார்கள். பாஜக, விஷ்வஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் ஆகியவை காஷ்மீர் தாக்குதலை தங்களுக்கு ஆதரவு அரசியலாக்க முயற்சி செய்கின்றன. அவற்றை நாங்கள் எதிர்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
மம்தாவின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், ''காஷ்மீர் தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீது பதிலடி கொடுக்க வேண்டுமென்று இந்தியாவே எதிர்ப்பார்க்கும் நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் மட்டும் அதனை எதிர்க்கிறது. மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்மாநில முதலமைச்சர் பாஜகவினரையே குறைகூறிக்கொண்டு இருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் கூட நிதியுதவி அளிக்கும் மேற்கு வங்க அரசு, காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த அம்மாநில வீரர்களுக்கு இதுவரை நிதியுதவி அறிவிக்கவில்லை'' என்று தெரிவித்தார்.