செய்தியாளர்: ராஜபத்ரன்
மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதனை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக மருத்துவர்கள் கூறினாலும், போராட்டத்தை அவர்கள் கைவிடுவதாக இல்லை. அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது காணலாம்.
கடந்த மாதம் கொல்கத்தா மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து கொல்கத்தாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 30 நாட்களுக்கு மேலாக மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க அரசு, போராடும் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை 4 முறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தது. 5 ஆவது முறை முயற்சிக்கு பலன் கிட்டியதை தொடர்ந்து, 42 மருத்துவர்கள் அடங்கிய குழு முதலமைச்சர் மம்தாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், மருத்துவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை, மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளார். கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல், வடக்கு மண்டல துணை ஆணையர் அபிஷேக் குப்தா, மருத்துவ கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநர் ஆகியோரை இடமாற்றம் செய்ய அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதேபோல், மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைப்பதற்கும், மம்தா இசைவளித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவர்களின் 99 சதவீத கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனவே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும், மருத்துவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிடுவதாக இல்லை.. மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. அந்த விசாரணையை பொறுத்தும், ஒப்புகொண்டபடி காவல் ஆணையர் உள்ளிட்டோர் பணியிட செய்யப்பட்ட பிறகுமே, போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே பேச்சுவார்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, போராட்ட களத்தில் மருத்துவர்கள் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். 30 நாட்களாக மேலாக நீடித்து வரும் மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா? அல்லது மம்தா பானர்ஜிக்கு தலைவலி தொடருமா என்பது இன்று மாலை தெரிந்து விடும்.