மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது ! கைவிரித்த மத்திய அரசு

மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது ! கைவிரித்த மத்திய அரசு
மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது ! கைவிரித்த மத்திய அரசு
Published on

மேற்கு வங்கத்தின் பெயரை ‘பங்களா’ என்ற பெயர் மாற்றம் செய்யக்கோரிய  மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

வங்கப்பிரிவினையின் போது வங்காளம் இரண்டாக பிரிந்து கிழக்கு வங்கம், மேற்கு வங்கம் என பிரிந்தது. இதில் கிழக்கு வங்கம், வங்கதேசம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தனி நாடாக உருவானது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்ற மம்தா பானர்ஜி அரசு இதுவரை 3 முறை மத்திய அரசை அணுகியது. மேற்குவங்கத்தின் ஆங்கில மொழியாக்கம் ‘வெஸ்ட் பெங்கால்’ என்பதால் மாநிலங்களின் பட்டியலில் இது கடைசி இடத்திற்கு வந்து விடுகிறது. மேலும் மத்திய அமைச்சக கூட்டங்களில், மாநிலத்தின் அதிகாரிகளுக்கு பேச வாய்ப்பு கிடைக்க நீண்ட நேரமாவதாகவும் மம்தா தெரிவித்தார்.

அதன்படி மேற்கு வங்கத்தின் பெயரை  பஸ்ச்சிம் பங்கா என மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றினார் மம்தா. ஆனால்  பஸ்ச்சிம் பங்கா  என மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற மாநில அரசு அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. பின்னர் 2016ம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தின் பெயரை பங்ளா என்று மாற்ற மாநில அரசு முடிவு செய்தது. இந்த தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்ய பெயர்மாற்ற விவகாரத்தைக் கண்டித்து இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இருப்பினும் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அந்த தீர்மானம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.  பின்னர் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்காலி, ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளுக்கும் பொதுவாக ‘பங்களா’ என்ற பெயர் மாற்றம் செய்து மேற்கு வங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த பரிந்துரையையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து பேசிய அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ், மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், ஆனால் பெயர் மாற்றப்பட்டால் அது பஸ்ச்சிம் பங்கா  என்ற பெயராகத்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com