“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி

“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
Published on

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு மசோதாவைக் கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன. இதனிடையே,‌ மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தம் உடனடியாக அமலுக்கு வந்தது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின்படி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் அல்லாத பிற 6 மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்கிறது. அதாவது இந்த நாடுகளிலிருந்து வந்த இந்து, பௌத்த, சமணம், கிறித்துவ, சீக்கிய மற்றும் பார்சி ஆகிய மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை அளிக்கிறது.  இந்த குடியுரிமையை பெற இவர்கள் அனைவரும் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் இந்தியாவிற்குள் குடியேறி இருக்கவேண்டும். 

இதற்கு முன்பு இருந்த குடியுரிமை சட்டத்தின்படி பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்திய குடியுரிமையை பெற முடியாது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஒருவர் வேறு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், இந்திய குடியுரிமையை பெற அவர் 12 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். இந்த விதியை 5 ஆண்டுகளாக குறைத்து சட்டத் திருத்த மசோதா மாற்றியுள்ளது. அதன்படி, தற்போது ஒருவர் இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்து இருந்தால், அவர் இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிக்கலாம். 

மேலும், இந்த குடியுரிமை சட்டம் அசாம், மேகாலாயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லாது. அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் 6வது அட்டவணையிலுள்ள பகுதிகளுக்கு இந்தக் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்தப்படாது. அத்துடன் ‘Inner line Permit’ என்ற அனுமதியை பெற வேண்டிய மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகியவற்றிற்கும் இந்தக் குடியுரிமை சட்டத் அமலுக்கு வராது. 

இந்தச் சட்டத் திருத்ததின் மூலம் இந்த நாடுகளில் மத பிரச்னைகளால் இந்தியாவிற்கு வந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.  அதேபோல இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. ஏனென்றால், குறிப்பிட்ட மதத்தை தவிர பிற மத மக்களுக்கு குடியுரிமை வழங்க வழி வகுக்கும் மசோதா இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் இது அடிப்படை உரிமையான சமத்துவம் (பிரிவு 14) மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவிக்கின்றனர். 

மேலும் இந்த மசோதா 1985ஆம் ஆண்டு கையெழுத்து இடப்பட்ட 'அசாம் அகார்டு’ ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளதால் இதற்கு வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஏனென்றால், அந்த ஒப்பந்தத்தின்படி 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவிற்குள் வந்தவர்கள் இந்திய குடியுரிமையை பெற முடியாது. இதனை புதிய சட்டத் திருத்தம் மீறும் வகையில் உள்ளது. ஆகவே வடகிழக்கு மாநிலங்கள் எதிர்க்கின்றன. 

அசாம், திரிபுரா, மேகலயா ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அங்கு நடக்கும் போராட்டங்களை கலைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பல இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் இதுவரை 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சூடுகளிலும் சிலர் இறந்துள்ளனர். போராட்டம் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேற்கு வங்கம் (திரிணாமுல் காங்கிரஸ்), பஞ்சாப் (காங்கிரஸ்), கேரளா(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மத்திய பிரதேசம் (காங்கிரஸ்) மற்றும் சத்தீஸ்கர் (காங்கிரஸ்) ஆகிய 5 மாநில அரசு இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், அதனை அமல்படுத்தமாட்டோம் எனவும் கூறியுள்ளன. 

இது இந்தியா முழுவதிற்கும் பொருந்தும், இதனை மாநில அரசுகள் தடுக்க முடியாது. வேண்டுமென்றால் அவர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று முறையிடலாம். மற்றபடி, சட்டத்தை தடுக்கும் அதிகாரம் அவற்றிற்கு இல்லை என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேசமயம் சட்டத்தை தடுக்க முடியாது எனத்தெரிந்தும், அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறு அவர்கள் கூறுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதற்கிடையே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார். இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்றும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருந்தாலும், மாநில அரசுகள் மீது பாஜக அதனை திணிக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். டிசம்பர் 16 முதல் 18ஆம் தேதி வரையிலும் தங்கள் மாநிலத்தில் குடியுரிமை சட்டதிருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com