ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்காக ஒரு முதலமைச்சர் தர்ணா போராட்டம் நடத்தியது இதுவே முதல் முறை என்று மம்தா பானர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. சிபிஐ மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது. அதன்படி கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் சுராபந்தரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, மம்தாவின் மோசமான ஆட்சியில் மக்கள் பரிதவிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
மக்கள் நன்மைக்காக என கூறி ஆட்சியை பிடித்தவர்கள் தற்போது வன்முறை கலாச்சாரத்தை பரப்பி வருவதாகவும் ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்காக ஒரு முதலமைச்சர் தர்ணா போராட்டம் நடத்தியது இதுவே முதல்முறை எனவும் சாடினார்.
மேலும் ஊழல் செய்தவர்களையும் அவர்களுக்கு துணை போனவர்களையும் தமது அரசு விட்டுவைக்காது என பிரதமர் பேசினார்.