மேற்கு வங்கத்தில் சிகிச்சை பெற வந்த நோயாளியின் துண்டிக்கப்பட்ட கையுடன் நாய் ஒன்று சுற்றித் திரிந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தெருநாய் ஒன்று துண்டிக்கப்பட்ட கையை மென்று கொண்டிருந்தது. மருத்துவமனையின் மொட்டை மாடியில் ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட கையை நாய் கவ்வியபடி சுற்றிக் கொண்டிருந்தது. அந்தக் கை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த சஞ்சய் சர்க்கார் என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டறிந்ததும் மருத்துவமனையில் இருந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று நடந்த சாலை விபத்தில் சஞ்சயின் ஒரு கை துண்டாகி உள்ளது. துண்டிக்கப்பட்ட கை மருத்துவமனையில் பாதுகாக்கப்படும் என்றும், விரைவில் உடலுடன் கை பொருத்தப்படும் என்றும் மருத்துவர்கள் அவரது குடும்பத்திடம் நேற்று கூறியுள்ளனர். ஆனால் இன்று காலை தெருநாய் ஒன்று சஞ்சயின் துண்டிக்கப்பட்ட கையை மென்று தின்றதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆத்திரமடைந்த உறவினர்கள் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் சரியான அளவில் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் சஞ்சய் மாலிக், சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.