சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதான ஹேமெந்திர மேராவி. இவருக்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதிதான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், புது மாப்பிள்ளையின் குடும்பத்தினர், திருமணத்திற்கு வந்தப் பரிசுப் பொருட்களை ஆர்வத்துடன் நேற்று பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, பரிசுப் பொருளாக வந்த ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தின் கேபிளை, அறையில் இருந்த மின்சார போர்டில் பொருத்தி, புது மாப்பிள்ளை ஹேமெந்திர மேராவி சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென வெடித்துச் சிதறியது.
இதில், புது மாப்பிள்ளை ஹேமெந்திர மேராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் மேராவியின் மூத்த சகோதரர் ராஜ்குமார் (30), ஒன்றரை வயது ஆண்குழந்தை உள்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில், கவர்தாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமாரும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, தடயவியல் நிபுணர்களுடன் வந்த கபீர்தாம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மனிஷா தாக்கூர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மின் கசிவா அல்லது வேறு ஏதேனும் விபத்துக்கான காரணமா என்று போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில், விபத்து நடந்த இடம் ராய்ப்பூரில் இருந்து 200 கி.மீ தொலைவில், அதாவது சத்தீஸ்கர்-மத்திய பிரதேச எல்லையில் மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதும் போலீசாரின் சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து நடந்த அறையில், ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை தவிர எளிதில் தீப்பற்றிக் கொள்ளும்படியான பொருட்களோ அல்லது தீ விபத்தை ஏற்படுத்தும்படியான பொருட்களோ எதுவும் இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.