பிளானட் ஆப் தி ஏப்ஸ் போல பிளானட் ஆப்தி கவ்ஸ் என்று ஒரு படம் எடுத்தால் பாகுபலி 2 படத்தை விட 10 மடங்கு அதிக வசூலைக் குவிக்கும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
அவரது வலைப்பக்கத்தில், ஹாலிவுட்டில் பிளானட் ஆப் தி ஏப்ஸ் என்ற திரைப்படம் சக்கை போடு போட்டது. அந்தப் படத்தில் மனிதக் குரங்குகள் பூமியை வெற்றி கொண்டு மனிதர்களை அவற்றின் அடிமைகளாக மாற்றி ஏவிக் கொண்டிருக்கும். அந்தப் படத்தை இந்தியாவில் பிளானட் ஆப் தி கவ்ஸ் என்று ரீமேக் செய்யலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில பசுக்களுக்காக நடைபெறும் சண்டைகளும் கொலைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஒரு பக்கம் பசுக்களைக் காக்கிறோம் என்று சொல்லி சிலர் அராஜகம் செய்கின்றனர். மற்றொரு பக்கம் மாட்டிறைச்சியை இந்தியாவில் தடை செய்தே தீருவோம் என்று சிலர் அடக்குமுறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது நோக்கம் பசுக்களையும் மாடுகளையும் காப்பதுதான் என்றால் பேசாமல் பாலிவுட் இயக்குனர்கள் பிளானட் ஆப் தி ஏப்ஸ் போல பிளானட் ஆப் தி கவ்ஸ் என்றொரு திரைப்படத்தை எடுக்கலாம். அந்தப் படத்தில் பசுக்கள் மனிதர்களை அடிமைகளாக்கி வேலை வாங்கும் சுவாரஸ்யமான காட்சிகளை கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் காட்டினால் பாகுபலியை விட 10 மடங்கு அதிக லாபம் ஈட்டித் தரும் என்று கட்ஜூ கருத்துத் தெரிவித்துள்ளார்.