கர்நாடகத்தில் புதிய அணைகள் கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பான வழக்கு விசாரணை நீதியரசர் தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது தமிழக அரசின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் சேகர் நாப்தே, கடந்த வாரத்தில் சில ஊடகங்களில் கர்நாடகா மேகதாதுவில் அணைகட்ட ஒப்புதல் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியிடப்பட்டதாகவும், இது குறித்து விளக்கமளிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கர்நாடகாவில் புதிய அணைகள் கட்டப்பட்டால் அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும், ஆதலால் ஒரு போதும் கர்நாடகத்தில் புதிய அணைகளைக் கட்ட தமிழகம் அனுமதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். இன்றைய வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட வந்திருந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், தமிழகத்தின் நிலை தெளிவாக உச்சநீதிமன்றத்தில் எடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.