குழந்தைப் பருவத்தில் இருந்தே முட்டையில் தொடங்கி மாமிசம் சாப்பிடப் பழகுபவர்கள், எதிர்காலத்தில் நரமாமிசம் உண்பவர்களாக மாறிவிடுவார்கள் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் கோபால் பார்கவா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டைப் போலவே மத்தியப்பிரதேச மாநில அரசு அங்கன்வாடி குழந்தைகளுக்கு, சத்துணவில் முட்டை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அம்மாநில எதிர்கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான கோபால் பார்கவா, இது முட்டை சாப்பிடாத குழந்தைகளையும் கட்டாயப்படுத்தும் செயல் எனவும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கோழி மற்றும் ஆட்டிறைச்சியையும் கொடுங்கள் எனவும் சாடியுள்ளார்.
இந்திய கலாசாரம் அசைவ உணவிற்கு எதிரானது எனவும் கோபால் பார்கவா தெரிவித்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆளும் உத்தராகண்ட், ஜார்கண்ட், அசாம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் முட்டை வழங்கப்படுகிறது எனவும், அங்கெல்லாம் குழந்தைகள் நரமாமிசம் உண்பவர்களாக மாறிவிட்டார்களா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.