"எல்லையில் அத்துமீறியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம்" பிரதமர் மோடி !

"எல்லையில் அத்துமீறியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம்" பிரதமர் மோடி !
"எல்லையில் அத்துமீறியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம்" பிரதமர் மோடி !
Published on

எல்லையில் அத்துமீறியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் "மன் கி பாத்" வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். அதேபோல இன்றும் அவர் உரையாற்றினார். அதில் " எந்த விதமான சவால்கள் நமக்கு வந்தாலும், இந்த ஆண்டைக் குறைசொல்லக்கூடாது. அனைத்துவிதமான சவால்களையும் வெற்றிகரமாகக் கடந்து இந்திய வரலாற்றில் பலர் இடம் பிடித்துள்ளார்கள். கிழக்கு லடாக்கில் நமது எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டவர்களுக்குத் தகுந்தபதிலடி தரப்பட்டுள்ளது. எல்லையையும், இறையாண்மையையும் பாதுகாப்பதில் இந்தியாவின் வலிமையான நிலைப்பாட்டை உலக நாடுகள் பார்த்துள்ளன" என்றார்.

மேலும் " நட்புறவுக்கு இந்தியா மரியாதை அளிக்கும். ஆனால், எந்தவிதமான அத்துமீறல் இருந்தாலும் எந்தவிதமான தயக்கமும் இன்றி பதிலடி கொடுப்போம். (சீனாவின் பெயரைக் குறிப்பிடவில்லை) துணிச்சல் மிகுந்த நமது வீரர்கள் இந்தியாவின் கவுரவத்துக்கு களங்கம் வர விடமாட்டார்கள். வீரம்மிகுந்த நமது ராணுவத்துக்கு இந்தியா தலைவணங்குகிறது. ராணுவம்தான் இந்தியாவைப் பாதுகாப்பாக வைத்துள்ளது. அவர்களின் வீரம் எப்போதும் நினைவில் கொள்ளப்படும். நம்முடைய தேசத்தை வலிமையாகவும், தற்சார்பு உடையதாகவும் மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுதான், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்" என மோடி தெரிவித்தார்.

அந்த உரையில் " மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்கான கோஷம் மக்கள் மத்தியில் வலுத்துள்ளது. இது தேசத்தை வலிமையாக்கி, முன்னேற்றத்தில் கொண்டு செல்லும். எந்த இயக்கமும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெறாது. ஒரு குடிமகனாக நான் கேட்கிறேன், இந்தியா தற்சார்பு பொருளாதாரத்தில் நோக்கி நகர அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

கொரோனா வைரஸ் குறித்துப் பேசிய மோடி "கொரோனா வைரஸ் பாதிப்பில் பொது முடக்கத்தை தளர்த்தும் காலத்தில் இருக்கிறோம். இன்னும் நாம் கூடுதல் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். ஊரடங்கு காலத்தில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. நிலக்கரி, விண்வெளி, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அனைவரும் கூட்டாகச் சேர்ந்து உழைத்து தேசத்தை சுயச்சார்பு உள்ளதாகவும், தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைந்த நாடாகவும் மாற்ற உதவ வேண்டும்" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com