புல்வாமா தாக்குதல் நடந்த அடுத்த நாளே பதிலடிக்கான திட்டத்தை இந்திய விமானப்படை தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தத் தாக்குலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று காலை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது.
பாகிஸ்தான் எல்லையையொட்டிய பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளைப் பொழிந்தது. இந்தத் தாக்குதல் ஜெய்ஷ்- இ- முகமது, லஷ்கர்- இ- தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாதி மசூத் அசாரின் மாமனார் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இத்தாக்குதல் மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்த அடுத்த நாளே பதிலடிக்கான திட்டத்தை இந்திய விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா தீட்டியதாகவும், அதன் முழு விளக்கத்தை தயாரித்து இந்திய அரசுக்கு அனுப்பி அதற்கு ஒப்புதல் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படிப்படியான திட்டமிடலுக்குப் பின்னரே இந்தத் தாக்கல் நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
(இந்திய விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா)
இந்தத் துல்லியத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இந்திய விமானப் படை பிரிவின் டைகர்ஸ் மற்றும் பேட்டில் ஆக்ஸிஸ் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் என்றும், ஒவ்வொரு படையிலும் 6 விமானங்கள் என மொத்தம் 12 போர் விமானங்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக மத்திய இந்தியப் பகுதிகளான பாட்டிண்டா மற்றும் ஆக்ரா பகுதிகளில் ஒத்திகை பார்க்கப்பட்டதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.