கொசுக்களை ஒழித்து விட நாங்கள் ஒன்றும் கடவுள் அல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த தனேஷ் லேஷ்தன் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க, ஒருங்கிணைந்த விதிமுறைகளை ஏற்படுத்த உத்தரவிடுமாறு கேட்டிருந்தார். அந்த மனு நீதிபதிகள் மதன் லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 'நாங்கள் கடவுள் அல்ல, கடவுள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளை எங்களைச் செய்யச் சொல்லாதீர்கள்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 'ஒவ்வொரு வீடாகச் சென்று கொசு இருக்கிறது, ஈ இருக்கிறது, அவை நோயைப் பரப்பும் என்பதால் அழித்து விடுங்கள் என்று கூறிக் கொண்டிருக்க முடியாது' என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். கொசுக்களை அறவே ஒழித்துக் கட்டுமாறு நிர்வாகத்துக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியும் என்று தங்களுக்கு தோன்றவில்லை என்று கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கொசுக்களை ஒழிக்க உத்தரவிடக் கோரி 2015ஆம் ஆண்டில் தொடரப்பட்ட இதேபோன்ற மனு ஏற்கனவே தள்ளுபடியானது.