கனத்த இதயத்துடன்தான் ஏக்நாத் ஷிண்டேவை மகாராஷ்ட்ரா முதல்வராக அறிவித்தோம் என அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வந்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி வகித்து வந்தார். இதனிடையே, கடந்த மாதம் சிவசேனா மூத்த அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏக்கள் திடீரென மாயமாகினர். பின்னர் அவர்கள் அசாமில் இருப்பது தெரியவந்தது. பதவி மற்றும் அதிகாரத்துக்காக இந்துத்துவா கொள்கைகளை உத்தவ் தாக்கரே அடமானம் வைத்துவிட்டதாக கூறி, அவருக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே அணியினர் போர்க்கொடி உயர்த்தினர்.
ஒருகட்டத்தில், சிவசேனாவில் உள்ள 40 எம்எல்ஏக்கள் ஷிண்டே அணிக்கு தாவினர். இதன் தொடர்ச்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, ஷிண்டே அணியுடன் கூட்டணி அமைத்தது. இதனால் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை பலத்தை அக்கூட்டணி பெற்றது.
இதையடுத்து, உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியில் அமர்ந்தது. அந்த சமயத்தில், முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவீஸ் பதவியேற்பார் என பாஜகவினர் உட்பட அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால், திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக பாஜக அறிவித்தது. துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவீஸ் அறிவிக்கப்பட்டார். இது, பாஜகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை பாஜக மறுத்து வந்தது.
"கனத்த இதயத்துடன்..."
இந்நிலையில், மகாராஷ்ட்ரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மும்பையில் அக்கட்சி தொண்டர்களிடம் இன்று உரையாற்றினார். அப்போது அவர், "மகாராஷ்ட்ராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்திருப்பது நமக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. ஆனால் நாம் மிகவும் எதிர்பார்த்த தேவேந்திர ஃபட்னாவீஸ் முதல்வர் பதவியில் அமராதது நமக்கு வருத்தம் தரக்கூடிய விஷயம்தான். கட்சி தலைமையும், தேவேந்திர ஃபட்னவீஸும் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். வேறு வழியில்லாமல் நாங்களும் கனத்த இதயத்துடன் இதனை ஏற்றுக்கொண்டோம்" என பேசினார்.
சந்திரகாந்த் பாட்டீலின் இந்த பேச்சானது ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.